செய்திகள் :

2024 - சிறந்த மலையாளப் படங்கள்!

post image

இந்தாண்டு வெளியான மலையாளப் படங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை.

இது, தரவரிசைப் பட்டியல் அல்ல. வெளியீட்டுத் தேதியின் அடிப்படையில் 2024-ன் சிறந்த 10 மலையாளப் படங்கள்...

மலைக்கோட்டை வாலிபன்

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக அடி வாங்கினாலும் படத்தின் கதையும் உருவாக்கமும் மலையாள சினிமாவின் தரத்தை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பாளிகள் உண்டு என்பதையே உணர்த்தின.

யாராலும் அசைக்க முடியாத மலைக்கோட்டை வாலிபன் (மோகன்லால்) கோட்டைக்குள் சென்று நடத்தும் தாக்குதல்களை சாகச பாணியில் படம் பதிவு செய்திருந்தது. தொழில்நுட்ப ரீதியாகப் பல இடங்களில் வியப்பை ஏற்படுத்திய ஒன்று. ஒளிப்பதிவாளர் மது நீலகண்டனின் ஒளியமைப்பு படத்திற்கு மிகப்பெரிய அழகைக் கூட்டியது குறிப்பிடத்தக்கது.

பிரேமலு

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் மிக சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட கமர்ஷியல் திரைப்படம் பிரேமலு. ஹைதாராபத்தில் ஒருதலைக் காதலை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் நாயகனும் அவனது நண்பனும் எடுக்கும் முயற்சிகள் மற்றும் சொதப்பல்கள் என சாதாரண நகைச்சுவைக் காதல் கதையை காட்சிப்படுத்திய விதத்தில் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

நடிகர்கள் மமிதா பைஜு மற்றும் நஸ்லனின் திரை வாழ்வில் பெரிய திருப்பத்தைக் கொடுத்த படமாக மாறியுள்ளது. தற்போது, படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழுவினர் உள்ளனர்.

பிரம்மயுகம்

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான திரைப்படம். சில ஆண்டுகளாகவே புதிய பாணி கதைகளில் நடிக்கும் மம்மூட்டி இந்தப் படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். முழு கருப்பு வெள்ளைப் படமாகவே உருவான இது 17 ஆம் நூற்றாண்டில் நடக்கிறது. கொடுமன் போற்றியின் (மம்மூட்டி) மாந்த்ரீக விளைவுகளால் ஏற்படும் பிரச்னைகளாக இதன் கதை இருந்தது. மம்மூட்டியின் வசனமும் உடல்மொழியும் ரசிகர்களைக் கவர்ந்தது.

முக்கியமாக, சாதிய ஆதிக்க மனநிலையை ஒரு சாத்தனின் குணங்களுடன் இணைத்து எழுத்தப்பட்ட திரைக்கதை விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. வெறும் படமாக மட்டுமல்லாமல் சில அரசியலையும் பேசியது. புதுவித முயற்சியாக மட்டுமல்லாமல் வசூலிலும் ரூ. 70 கோடி வரை வசூலித்து வணிக வெற்றியையும் அடைந்தது.

மஞ்ஞுமல் பாய்ஸ்

சொல்லித் தெரிய வேண்டாம் என்கிற அளவிற்கு தமிழகத்திலும் சக்கைபோடுபோட்ட முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்ற திரைப்படம். கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மஞ்ஞுமல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வருகின்றனர். அப்போது, குணா குகையைச் சுற்றிப்பார்க்கும்போது அதன் குகைக் குழிக்குள் ஒருவர் விழுந்துவிடுகிறார். உள்ளே விழுந்தவரை அவரின் நண்பர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை, குணா படத்தின் ’கண்மணி அன்போடு காதலன் பாட்டு’ வழியாகவே உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமென்பதால் பலருக்கும் எமோஷனலாக இருந்தது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் உலகளவில் ரூ. 240 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இதுவே, இதுவரை அதிகம் வசூலித்த மலையாளப் படம். இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்துப் படக்குழுவைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆடு ஜீவிதம்

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற உண்மைக் கதையை இயக்குநர் பிளஸ்சி அதே பெரியரில் இயக்கியிருந்தார். நாயகனாக பிருத்விராஜ் நடித்துள்ளார். பிழைப்பு தேடி அமீரக நாட்டுக்குச் செல்லும் நாயகன் அங்கு ஏமாற்றப்பட்டு ஆடு மேய்க்க அழைத்துச் செல்லப்படுகிறார். அடிமையாக காலம் செல்ல, அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். நாயகன் நஜீப் அடிமை வாழ்வை உடைத்து தப்பினாரா? அமீரக நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களின் நிலை என நெருக்கமான திரைப்படமாக ஆடுஜீவிதம் உருவாகியிருந்தது.

ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் மனதைத் தொடும் வகையில் இருந்தன. இப்படத்திற்காக, ஆஸ்கர் விருதுக்கு ரஹ்மான் மீண்டும் பரிதுரைக்கப்பட்டுள்ளார். நடிகராக பிருத்விராஜ் கடுமையாக உடல் எடையைக் குறைத்து, நஜீப்பின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்திய நடிப்பை வழங்கியது பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. பிருத்விராஜுக்கு தேசிய விருது கிடைக்கலாம்.

தலவன் (thalavan)

நடிகர் ஆசிஃப் அலி மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம். ஒரு கொலை நிகழ்கிறது. அதற்கான காரணங்கள் என்ன என கறாரான அதிகாரியாக வரும் ஆசிஃப் அலி வழக்கைத் தீவிரமாக விசாரிக்கிறார். ஆனால், வழக்கின் போக்கு மாற குழப்பங்கள் ஏற்படுகின்றன. இரு காவல் அதிகாரிகளுக்கு இடையேயான ஆணவம், அதிகாரம் ஆகியவை சரியாக எழுதப்பட்டிருந்தன.

கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் இறுதிவரை திருப்பங்களுடன் இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஜிஸ் ஜாய் இயக்கிய இப்படம் நல்ல வசூலையும் ஈட்டியது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.

உள்ளொழுக்கு

நடிகைகள் பார்வதி திருவோத்து மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியாகி விமர்சகர்களிடம் பெரிய பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம். திருமணத்திற்குப் பின் தன் வாழ்க்கையில் நிகழும் சோகங்களால் நாயகி தடுமாற்றம் அடையும்போது, அவள் எங்கும் செல்லக்கூடாது என நாயகியின் மாமியாரான ஊர்வசி உறுதியாக இருப்பார். பெண்ணை சமூகம் வைத்திருக்கும் நிலையையும், பெண் விடுதலை அடைகிற இடங்களையும் இயக்குநர் கிறிஸ்டோ டாமி அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தார்.

மழை வெள்ளத்தால் வீடு முழுக்க நீர் சூழ்ந்திருக்க பார்வதியின் மனநிலை மாறுவதைப் பார்க்க நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால், உணர்வுப்பூர்வமாக அதிர்ச்சிகளைத் தராதது சிறிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், மலையாளத்தில் இந்தாண்டு வெளியான நல்ல படங்களில் ஒன்று.

இதையும் படிக்க: 2024 - சிறந்த தமிழ்ப் படங்கள்!

லெவல் கிராஸ் (level cross)

மிகச் சாதாரணமான கதை. மூன்றே கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் திரைப்படமாக உருவான இது, உங்கள் மதி நுட்பம் என்ன என்பதை சோதித்துவிடும். நாயகன் ஆசிஃப் அலி பாலைவனப் பகுதியில் ரயில்வே துறையில் கேட் கீப்பராக வேலை செய்கிறார். யாருமே இல்லாத அப்பகுதிக்கு எதிர்பாராத விதமாக வரும் நாயகி அமலா பால் சந்திக்கும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக இதன் கதை உருவாக்கப்பட்டிருந்தது.

மனநிலை பிசகிய நாயகனின் ஒவ்வொரு கதைக்குப் பின்பு இருக்கும் உண்மைகள் இறுதியில் உடையும்போது, ’அட’ என அதிரவைத்திருவார் இயக்குநர். சைக்கோ திரில்லராக உருவான இப்படத்தைக் கவனமாகப் பார்ப்பவர்களுக்கே கதை எங்கு செல்கிறது, யார் உண்மையான கொலையாளி என்பது புரியும். கடைசி ஃபிரேம் வரை கதை இருக்கிறது.

அடியோஸ் அமிகோ (Adios amigo)

இரண்டு குடிகாரர்களைப் பற்றிய கதை. பணத்தின் அருமை தெரியாத குடிகாரனுக்கும், அருமை தெரிந்த குடிகாரனுக்கும் இடையேயான நட்பைப் பேசும் திரைப்படம். நடிகர்கள் ஆசிஃப் அலி, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படமென்றாலும் மிகையாகாது. குடி போதையிலேயே இருக்கும் ஆசிஃப் அலி ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க அவரைப் பார்த்து திணறும் சுராஜும் நம்மை விடாமல் சிரிக்க வைப்பார்.

கதை மெல்ல மெல்ல நகர்ந்து மழை சொட்டுவதுபோல் நிறைவடையும்போது அழகான திரைப்படம் பார்த்த நிறைவு கிடைக்கிறது. இயக்குநர் நஹாஸ் நாசர் கவனிக்கப்பட வேண்டியவர். குடியின் தீமைகள் ஒருபுறம் என்றால் அதன் மறுபக்கத்தை நகைச்சுவையும் நெகிழ்ச்சியுமாகக் காட்டியிருப்பார்.

கிஷ்கிந்தா காண்டம்

மலையாள சினிமாவின் ஆச்சரியமான வருகையாக இப்படம் பார்க்கப்படுகிறது. மிகக்குறைவான பட்ஜெடில் உருவான இத்திரைப்படம் ரூ. 80 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது. வனத்துறை அதிகாரியாக இருக்கும் ஆசிஃப் அலி முதல் மனைவியின் மறைவுக்குப் பின் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். முதல் மனைவிக்குப் பிறந்த மகன் காணாமல்போன வழக்குடன் படத்தின் கதை ஆரம்பமாகிறது.

உண்மையில், ஆசிஃப் அலியின் மகனுக்கு என்ன ஆனது என்பதை திருப்பங்களுடன் மேன்மையான தந்தை - மகன் பாசத்தை முன்வைத்து விரிந்த இக்கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில குறைகள் தென்பட்டாலும் குரங்குகளின் வழி மனிதர்களின் மனநிலையைக் கையாண்ட இயக்குநரின் நேர்த்தி மிகச்சிறப்பு. நடிகர்கள் ஆசிஃப் அலியும் ராகவனும் தனியாகப் பேசிக்கொள்ளும் முக்கியமான காட்சியே படத்தின் பலம்.

இவை தவிர, மலையாளத்தில் இந்தாண்டில் மேலும் சில நல்ல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக, ஆவேஷம், வர்ஷங்களுக்கு ஷேஷம், குருவாயூர் அம்பலநடையில், அன்வேஷிப்பின் கண்டேதும், சூக்சுமதர்ஷினி உள்ளிட்ட படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தன.

சர்வதேச திரைவிழாக்களில் பங்கேற்று பிரபலமடைந்த இயக்குநர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமாஜின் ஏஸ் லைட்’ (All we imagine as light) திரைப்படத்தில் மலையாள நடிகர்களும் மொழியும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் மலையாளப் படம் என சுருக்க முடியாத கதை பின்னணியுடன் உருவாகியுள்ளது. சில எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி: முதல் பாடலின் லிரிக்கல் விடியோ!

நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உ... மேலும் பார்க்க

பிக் பாஸில் உறுதியான காதல் திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தனது காதலை வெளிப்படுத்தினார் செளந்தர்யா. பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்த முன்னாள் போட்டியாளர் விஷ்ணு விஜய்யிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மண்டியிட்டு கே... மேலும் பார்க்க

விடாமுயற்சி பாடலில் ‘இருங்க பாய்’..! சமூக வலைதளத்தில் வைரல்!

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அதில் இருங்க பாய் என்ற வார்த்தை பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவர்களின் மத்தியில் இருங்க பாய் என்ற வார... மேலும் பார்க்க

உப்பு புளி காரம் இணையத் தொடர் நிறைவு!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற உப்பு புளி காரம் இணையத் தொடர் விரைவில் நிறைவு பெற்றவுள்ளது. இதன் இறுதிநாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இத்தொடரின் நடித்த நடிகர்கள்... மேலும் பார்க்க

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல்!

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.‘ம... மேலும் பார்க்க