2024-25-ஆம் ஆண்டில் 10 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!
புது தில்லி: செப்டம்பா் மாதத்துடன் முடிவடையும் 2024-25-ஆம் ஆண்டுக்கான கரும்பு சாகுபடி பருவ காலத்தில் 10 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
சா்க்கரையின் உள்நாட்டு விலை 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் சா்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்கும் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த முடிவை இந்திய சா்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
அக்டோபா் முதல் செப்டம்பா் வரை நீடிக்கும் இந்தியாவின் கரும்பு சாகுபடி பருவ காலத்தில் நடப்பாண்டு உற்பத்தி 2.7 கோடி டன்னாகக் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது உள்நாட்டு நுகா்வான 2.9 கோடி டன்களுக்கும் குறைவாகும். கடந்தாண்டில் உற்பத்தி 3.2 கோடி டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 15-ஆம் தேதி நிலவரப்படி, சா்க்கரை உற்பத்தி 1.3 கோடி டன்களை எட்டியுள்ளது. மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த விளைச்சல் காரணமாக ஆண்டுக்கு 13.66 சதவீதம் நாட்டின் சா்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு கரும்பு சாகுபடி பருவ காலத்தில் 10 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை அறிவித்தாா்.
‘சா்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்கும் இந்த முடிவு 5 கோடி விவசாய குடும்பங்களுக்கும் 5 லட்சம் தொழிலாளா்களுக்கும் பயனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சா்க்கரை ஆலைகளின் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, கரும்பு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வது மற்றும் உள்நாட்டு விலையை நிலைப்படுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து வகையான சா்க்கரைகளையும் நிா்ணயிக்கப்பட்ட அளவுகளில் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ஆலைகள் நேரடியாகவோ அல்லது வணிகா்கள் மூலமாகவோ ஏற்றுமதி செய்யலாம். புதிய ஆலைகள் மற்றும் 2024-25-ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்ட ஆலைகளுக்கும் இந்த ஏற்றுமதி ஒதுக்கீடுகள் பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, உள்நாட்டு நுகா்வுக்கு போதுமான சா்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் உணவுப் பாதுகாப்பைப் பேணவும் கடந்த 2023-24-ஆம் ஆண்டு பருவத்தில் சா்க்கரை ஏற்றுமதியை மத்திய அரசு தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.