நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
2024 Online Shopping: சிப்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், ஆணுறை... ஆன்லைனில் அதிகம் விற்ற பொருள்கள்..!
உணவு மட்டுமல்லாமல் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருள்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் பெருகிவிட்டது.
செப்டோ, ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளின்க் இட் போன்ற தளங்கள் இதற்காக செயல்படுகின்றன. இந்த தளங்களில் இந்த ஆண்டு முழுவதும் எந்தெந்த பொருள்களை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறித்த தரவுகள் வெளியாகியிருக்கின்றன.
பிளின்க் இட்டில் 1.75 கோடி மேகி, சொமேட்டோவில் 12 லட்சம் மேகி மசாலா, ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் 2.7 லட்சம் டூத் பிரஷ்கள் என நாடுமுழுவதும் பெரிய அளவில் உடனடி பயன்பாட்டுக்கான பொருள்கள் விற்பனையாகியிருக்கின்றன.
மளிகை பொருள்கள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், மருந்துகள், உடைகள் கூட இந்த ஆண்டு மிக விரைவாக டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன.
செப்டோவில் ஒரு ஆர்டர் 25 நொடிகளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கொச்சிக்கு அருகே 180 மீட்டர் தொலைவில் ஆர்டர் செய்யப்பட்ட பொருளை ஸ்விகி இன்ஸ்டாமார்ட் ஊழியர் 89 நொடிகளில் டெலிவரி செய்துள்ளதாக கூறுகின்றனர்.
சராசரியாக ஒரு டெலிவரி இன்ஸ்டாமார்டில் 8 நிமிடங்களிலும், செப்டோவில் 9 நிமிடங்களிலும் பிளின்க் இட்டில் 11 நிமிடங்களிலும் செய்யப்படுகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஸ்நாக்ஸ் மற்றும் குளிர் பானங்கள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
பிளின்க் இட்டில் 1.85 கோடி கோலா, 84 லட்சம் தம்ப்ஸ் அப், 14.6 லட்சம் மாசா என குளிர் பானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதிலும் ஒரே ஒரு நபர் மட்டுமே 1,203 ஸ்ப்ரைட்களை ஆர்டர் செய்துள்ளார்.
டெல்லியில் அதிகமாக ஸநாக்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. பயனர்கள் 60 கோடி ரூபாய்க்கு உடனடி நூடூல்ஸ்களை மட்டுமே வாங்கியுள்ளனர். மேலும் ஹைத்ராபாத், சென்னை, கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அதிக சிப்ஸ் விற்கப்பட்டுள்ளன.
செப்டோவில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணிக்கு இடையில் மட்டுமே 2 கோடி ஸ்நாக்ஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் இப்படி நள்ளிரவில் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது.
பிளின்க் இட் தளத்தில் அதிகபட்சமாக 17.6 லட்சம் ஆணுறைகள் மும்பை பயனர்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. செப்டோவில் பெங்களூரு பயனர்கள் 4 லட்சம் ஆணுறைகள் ஆர்டர் செய்துள்ளனர். இன்ஸ்டாமார்டில் ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு 140 பொருள்களிலும் ஒன்று பாலியல் சார்ந்ததாக இருந்துள்ளது.
இன்ஸ்டாமார்டில் பால், தயிர், தோசை மாவு, சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் ஆகிய பொருள்களே அதிகம் விற்கப்பட்ட டாப் 5 பொருள்கள். இந்த தளத்தில் அதிகபட்சமாக டெல்லி மற்றும் டேராடூனைச் சேர்ந்த நபர்கள் 20 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளனர்.