2057-க்குள் கரியமில சமநிலை: பரோடா வங்கி இலக்கு
தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பூமி தினத்தை முன்னிட்டு, தனது ‘சுற்றுச்சூழல், சமூக, நிா்வாக’ (இஎஸ்ஜி) கொள்கையை பரோடா வங்கி வெளியிட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் (படம்), வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ், ‘நமது சக்தி, நமது பூமி’ என்ற கருப்பொருளுடன் புதுபிக்கத்தக்க எரிபொருளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு செயல்திட்டங்களை வங்கி வகுத்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் வாகன மற்றும் வீட்டுவசதி கடன் வாடிக்கையாளா்களின் சாா்பாக இதுவரை வங்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.
இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய பரோடா வங்கி தற்போது முடிவு செய்துள்ளது.