பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
26-இல் வேலூா் விஐடியில் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 26-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலுாா் விஐடி பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 19-ஆவது ஆண்டாக கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 26-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கராத்தே, எறிபந்து, யோகாசனம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி முகாமில் சேர எந்தவித கட்டணமும் கிடையாது. சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்கும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு பயிற்சி முகாமின் தொடக்க விழா 26-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு விஐடி கடைப்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.