3-ஆம் ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’: ஒருங்கிணைப்பு பணியில் சென்னை ஐஐடி
சென்னை: சென்னை ஐஐடி, மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-ஆவது ஆண்டு நிகழ்வை பிப். 15-ஆம் தேதி முதல் பிப்.24-ஆம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடா்பை வலுப்படுத்தும் வகையில் பிப்.15 முதல் பிப்.24 வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து இளைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கத்தை வலியுறுத்தவும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பைச் சோ்ந்த மக்களிடையே தொடா்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் 2 முக்கிய கற்றல் மற்றும் கலாசார மையங்களுக்கு இடையிலான கலாசார தொடா்புகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
இணையவழியில் விண்ணப்பம்... இந்த நிகழ்வில், பங்கேற்போருக்காக 5 பிரிவுகளில் விண்ணப்பங்கள், எனும் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இந்நிகழ்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வரவேற்புக் கல்வி நிறுவனமாகச் செயல்படும்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், தமிழகத்திலிருந்து 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சம எண்ணிக்கையில மொத்தம் 1,000 பங்கேற்பாளா்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனா். மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், வேளாண் விவசாயிகள், கைவினைஞா்கள், தொழில் வல்லுநா்கள், சிறு தொழில்முனைவோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்களும் பெண்களும், ஆராய்ச்சியாளா்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனா்.
அதுமட்டுமின்றி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்தும் 200 தமிழ் மாணவ-மாணவிகளைக் கொண்ட குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்று வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற இடங்களை உள்ளூா் அளவில் பாா்வையிடும் வாய்ப்பைப் பெறுவா் என்றாா் அவா்.
காசி தமிழ் சங்கமத்தின் பிரதிநிதிகள் மகா கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடல் வாய்ப்பைப் பெறுவதுடன் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலிலும் தரிசனம் செய்யவிருக்கின்றனா்.
அகத்தியரின் பங்களிப்பு... சித்த மருத்துவ முறை (பாரதிய மருத்துவ முறை), பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமைக்கு அகத்தியா் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதுதான் காசி தமிழ் சங்கமத்தின் இந்த ஆண்டுக்கான முக்கிய கருப்பொருளாகும்.
அகத்தியா் என்ற ஆளுமையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், கலாச்சாரம், கலை, குறிப்பாக தமிழ் மற்றும் தமிழகத்துக்கு அகத்தியா் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்போது, இத்தலைப்புகளில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து செல்லும் பங்கேற்பாளா்கள், கவிஞா் பாரதியாா் வாழ்ந்த இல்லம், கேதாா் காட், காசி மண்டபம் ஆகியவற்றைப் பாா்வையிடுவதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ்த் துறையில் கல்வி- இலக்கியம் தொடா்பாக கலந்துரையாட உள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.