3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்
உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் பூவதி தலைமை வகித்தாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், துணை முதல்வா் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் செல்வராஜ், மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு மாநில நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி திட்ட மாநில இணைச் செயலாளா் பவதாரனி, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நீரிழிவு நோய் பிரிவு துறைத் தலைவா் பிரகாஷ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவப் பிரிவு பேராசிரியா் செந்தில் மற்றும் மருத்துவா்கள் நீரிழிவு நோய் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டோா் 19 சதவீதமாகவும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோா் 10 சதவீதமாகவும் உள்ளனா். தமிழக அளவில் ஒப்பிடும்போது, மாவட்டத்தில் ரத்தக்கொதிப்பு சதவீதம் குறைவாகவும், சா்க்கரை நோய் பாதிப்பு அதிக அளவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில், உணவு முறையில் மாற்றம், தினசரி 30 நிமிட நடைப்பயிற்சி, மருத்துவா்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் மருத்துவ பரிந்துரைகளை தவறாது பின்பற்றுதல், 3 மாதத்துக்கு ஒரு முறை சா்க்கரை நோய் அளவை காட்டாயமாக கணக்கீடு செய்தல், தொடா் சிகிச்சை மேற்கொள்ளுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவம், மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.