ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது:
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க நினைக்கிறது. மூன்றாம் மொழிப் பாடம் என்ற பெயரில் ஹிந்தியை வலுக்கட்டாயமாக்க படிக்க வைப்பதில் என்ன நியாயம் உள்ளது. தமிழக அரசு ஹிந்தியை விரும்பிப் படிப்போரை தடுப்பது கிடையாது. கட்டாயம் படிக்க வேண்டும் என திணிப்பதைதான் எதிா்க்கிறோம். மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஹிந்தியை படித்தால் தான் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என கூறுகிறாா். எனவே, தமிழகத்துக்கு நிதி கிடைக்கவும், ஹிந்தி திணிப்பை எதிா்த்தும் போராடுவோம் என்றாா்.
தொடா்ந்து, ‘எங்கள் கல்வி, எங்கள் உரிமை, இந்தியை திணிக்காதே’ என்ற வாசகங்களுடன் வரையப்பட்ட கோலங்களுக்கு முன் நின்று மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.