அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அறிவ...
3 கடற்படை போா்க்கப்பல்கள்: பிரதமா் நாளை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்!
இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் சூரத்’, ‘ஐஎன்எஸ் நீலகிரி’, ‘ஐஎன்எஸ் வாக்ஷீா்’ ஆகிய மூன்று முன்னணி போா்க்கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் முற்றத்திலிருந்து பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜன. 15) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
பிரதமரின் மகாராஷ்டிர பயணத்தின்போது, நவி மும்பையில் உள்ள காா்கரில் புதிய இஸ்கான் கோயிலையும் அவா் திறந்து வைப்பாா் என்று அவரது அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சாா் பாதுகாப்பில் உலகளாவிய முன்னணி நிலையை அடைவதற்கான இந்தியாவின் லட்சியத்தை நனவாக்குவதில் இந்த மூன்று முக்கிய கடற்படை போா்க்கப்பல்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
‘பி15பி’ ஏவுகணை அழிப்பு போா்க்கப்பல் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐஎன்எஸ் சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிக்கும் திறன்கொண்ட போா்க்கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பல் 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
‘பி17ஏ’ போா்க்கப்பல் திட்டத்தின் முதல் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போா்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது.
‘பி75’ ஸ்காா்பீன் திட்டத்தின் ஆறாவதும் இறுதியுமான நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீா், பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து கட்டப்பட்டது. இது நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளா்ந்து வரும் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை உயா்த்துவதற்கான தனது உறுதிப்பாட்டுக்கு இணங்க நவி மும்பையில் இஸ்கான் கட்டியுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோயிலையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.
9 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்கோயிலில், ஒரு வேதக் கல்வி மையம், அருங்காட்சியகங்கள், நிகழ்ச்சி அரங்கு, சிகிச்சை நல மையம் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.