30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!
குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளா் ஸ்ரீதேவி தலைமையிலான மதுவிலக்கு போலீஸாா், குன்றத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணித்து வந்தனா்.
குன்றத்தூா் அடுத்த நத்தம் முருகன் கோயில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரண்டு பைகளுடன் வந்த வடமாநில இளைஞரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து விசாரித்த போது, அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சித்துடோங்கிரி (19) என்பதும், தமிழகத்துக்கு வேலைக்கு வருவது போல் பெரிய பைகளில் துணிகளை வைத்து அதற்கு இடையில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சித்துடோங்கிரியிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.