பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவகி (48). விவசாயியான இவா், வயலில் விளைவித்த நெல்லை அரக்கோணம் சாலையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்யச் சென்றுவிட்டு, தனது சகோதரா் மகன் விஜய் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கோவிந்தவாடி அகரம் கூட்டுச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், தேவகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.