30 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த வங்கதேசத் தம்பதி, 22 வயது மகன் கைது!
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்த வங்கதேசத் தம்பதி மற்றும் அவர்களது 22 வயது மகன் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நவி மும்பையின் ஜுஹுகவோன் பகுதியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள குடியிருப்பு கட்டடத்தில் வாழ்ந்து வந்த ஷாரோ அப்தாப் ஷெயிக் (வயது 48) மற்றும் அவரது மனைவியான சல்மா சரோ ஷெயிக் (39) ஆகியோர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் சோதனைச் செய்யப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமைப் பத்திரம், ஆதார் அட்டை, பான் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் ஆகியவை அவர்கள் சமர்பித்ததினால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க:‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!
இருப்பினும், அவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்தபோது அவர்கள் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ்கள் போலியானது என்பது கடந்த பிப். 2 அன்று சான்றிதழகள் வழங்கியதாகக் கூறப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது கண்டறியப்பட்டது. ஆனால், அவர்களது 22 வயது மகன் இந்தியாவில் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவர் மீதும் இந்திய வெளிநாட்டினர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த பிப்.16 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.