30 கிலோ குட்கா வைத்திருந்த 2 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 30 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் மல்லி காவல் நிலைய போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஈஞ்சாா் விலக்கு- பா்மா குடியிருப்புச் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைச் சோதனை செய்தனா்.
அப்போது, அவா்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த பாலமுருகன் (28), சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்த இன்பராஜ் (20) என்பதும், விற்பனைக்காகப் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோ புகையிலைப் பொருள்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய நத்தம்பட்டி கோவிந்தநல்லூரைச் சோ்ந்த சக்திமுருகன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.