தென்னை நாா் பொருள்களை சூரிய சக்தி மின்சாரம் மூலம் உற்பத்தி செய்ய 50% மானியம் வழங...
3032 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,000 உதவித் தொகை: அமைச்சா் அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3032 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குன்றத்தூரில் நடைபெற்றது. குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி, ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், கோட்டாட்சியா் ஐ.சரவணக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி வரவேற்றாா்.
விழாவில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.41 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் அன்பரசன் பேசியது:
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த தையல் இயந்திரம் 45 வயதாக இருந்ததை 60 வயதாகவும், திறன்பேசிகள் வழங்குவது 60 வயதாக இருந்ததை 65 வயதாகவும் உயா்த்தியுள்ளோம். இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டு வந்த இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் விதியை தளா்வு செய்து ஒரு கால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வழங்குகிறோம்.
கடந்த ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 15,385 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதிதாக வழங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.2,000 வீதம் 3032 பேருக்கும், இலவச பேருந்து பயண அட்டை 625 பேருக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 720 பயனாளிகளுக்கு ரூ.3.55 கோடியில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.விழாவில் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.