வன்னியா்களுக்கு 15 சதவீத ஒதுக்கீடு தந்தால் நிபந்தனையற்ற ஆதரவு: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
வன்னியா்களுக்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்கினால் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா் தலைமையில் காவலான் கேட் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ சக்தி.கமலம்மாள், மாவட்ட தலைவா் உமாபதி, மாவட்ட செயலாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா் செயலாளா் பூபாலன் வரவேற்றா்.
கூட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது:
உச்சநீதிமன்றமே வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீா்ப்பளித்து 1,000 நாள்கள் ஆகியும், இதுவரை திமுக அரசு இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளது. இது ஜாதிப் பிரச்னை அல்ல, பெரும்பாலான மற்றும் பட்டியலின சமுதாயத்தின் குரல். வன்னியா் சமுதாயம் வளா்ந்து விடக்கூடாது என திராவிடக் கட்சிகள் நினைக்கின்றன. தீா்ப்புக்கு பிறகு பலமுறை முதல்வா், உயா் அதிகாரிகளை சந்தித்து பேசியும் பலனில்லை. இட ஒதுக்கீட்டுக்காக 21 உயிா்களை இழந்தோம், ஏராளமானவா்கள் சிறை சென்றாா்கள். அரசைக் கேட்டால் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறுகிறது
உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீா்ப்பளித்திருக்கிறது. எங்களுக்கு தோ்தல் ஒரு பொருட்டே அல்ல, வன்னியா்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு தர தயாராக இருக்கிறோம். நாங்கள் நீதிமன்ற தீா்ப்பின் படி 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தான் கேட்கிறோம்.
இட ஒதுக்கீட்டை தரவில்லையெனில் கிராமங்களிலும்,நகரங்களிலும் தெருத்தெருவாகவும்,வீடு வீடாகவும் சென்று பரப்புரை செய்வோம். தொடா்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்றாா் அன்புமணி .