இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
32 ஆண்டுகள் தீவில் தனியாக வாழ்ந்த நபர்! வெளியேறிய 3 ஆண்டுகளில் மரணம்!
இத்தாலி நாட்டின் தீவு ஒன்றில் 32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த நபர் அதைவிட்டு வெளியேற்றப்பட்ட 3 ஆண்டுகளில் மரணமடைந்துள்ளார்.
அந்நாட்டின் மொடான எனும் ஊரைச் சேர்ந்த மௌரோ மொராண்டி (வயது 85) எனும் நபர் சார்டீனியா தீவுகளிலுள்ள புடெள்ளி எனும் தனித்தீவில் சுமார் 32 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த சமூகத்திலிருந்தும் தப்பித்து பாலினேசியா தீவுகளுக்கு செல்வதற்காக கட்டுமரப்படகில் அவர் பயணம் மேற்கொண்டபோது விபத்துக்குள்ளாகி புடெள்ளி தீவை அடைந்துள்ளார்.
அன்று முதல் அந்த தீவை பராமரித்துக்கொண்டும், அதன் கடற்கரைகளை தூய்மைப் படுத்திக்கொண்டும், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவின் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
அவரது பணிக்காக அவருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவராகவே தான் வாழ்ந்த வீட்டில் சூரிய மின்சக்தி அமைப்பை உருவாக்கி குளிர்காலங்களில் வீட்டை சூடாக்கி வாழ்ந்துள்ளார்.
இதையும் படிக்க:10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் "முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!
இதனால், இவரைப்போலவே தனித்தீவில் வாழ்ந்தாகக் சித்தரிக்கப்பட்ட பிரபல புத்தக கதாபாத்திரமான ‘ராபின்சன் க்ரூஸோ’ எனும் செல்லப்பெயராலும் அவர் அழைக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு புடெள்ளி தீவை சுற்றுச்சூழல் கல்விக்கான இடமாக உருமாற்றும் திட்டத்திற்காக லா மடலேனா தேசியப் பூங்காவின் அதிகாரிகளினால் அவர் அந்த தீவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் சார்டீனியா தீவுகளின் லா மடலேனா எனும் இடத்தில் ஒரேயோரு அறைக்கொண்ட வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலைக் குன்றியதினால் அவர் தனது பூர்வீகமான மொடெனா எனும் ஊரில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த வார இறுதியில் அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த தீவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட பின்னர் பல காலமாக அமைதியில் வாழ்ந்த அவருக்கு நகரத்தின் சத்தம் பிடிக்கவில்லை என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.