Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
4 முறை வன்கொடுமை செய்த எஸ்.ஐ - தற்கொலைக்கு முன் பெண் மருத்துவர் கையில் எழுதியிருந்த அதிர்ச்சி வரிகள்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பல்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தனது விடுதியில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு தனது தற்கொலைக்கு காவல் உதவி ஆய்வாளர் கோபால் தான் காரணம் என்றும், அவர் தன்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது உள்ளங்கையில் எழுதி வைத்திருந்தார். காவல் உதவி ஆய்வாளர் தன்னை கடந்த 5 மாதங்களாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக துன்புறுத்தி வந்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அப்பெண் டாக்டர் எழுதி வைத்துள்ள 4 பக்க கடிதமும் சிக்கி இருக்கிறது.
அதில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பணியில் உடல் தகுதி சான்று கொடுக்கும் விவகாரத்தில் தனக்கு அதிக அளவில் காவல்துறையினர் நெருக்கடி கொடுத்ததாகவும், குற்றவாளிகளை உடல் தகுதி சோதனைக்கு அழைத்து வராமலேயே உடல் தகுதி சான்று கொடுக்கும்படி காவல் உதவி ஆய்வாளர் நிர்ப்பந்தம் செய்ததாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தன்னை கோபாலும் மற்றவர்களும் சித்ரவதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு முறை இது போன்று உடல் தகுதி சான்று கொடுக்க மறுத்தபோது எம்.பி ஒருவரின் உதவியாளர்கள் இரண்டு பேர் மருத்துவமனைக்கு வந்து மிரட்டினர். அதோடு எம்.பி.க்கும் போன் செய்து கொடுத்தனர். எம்.பி.யும் என்னை மறைமுகமாக மிரட்டினார். போலி சான்றிதழ் கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக அவர் தனது தற்கொலைக்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டாக்டரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ''பெண் டாக்டர் போலி சான்றிதழ் கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்வது குறித்து இரண்டுக்கும் மேற்பட்ட முறை எஸ்.பி மற்றும் டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டி.எஸ்.பியை நேரில் சந்தித்து கூட புகார் செய்துள்ளார். ஆனாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று தெரிவித்தார். கடிதத்தில் தான் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர் பிரசாந்த் தன்னை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோபால் தலைமறைவாகிவிட்டார். அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் மகனுடன் பெண் டாக்டருக்கு தொடர்பு?
போலீஸ் எஸ்.பி. துஷார் இது குறித்து கூறுகையில்,''இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டு உரிமையாளர் மகனுக்கும், பெண் டாக்டருக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக உறவு இருந்துள்ளது. ஆனால் சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அவர்கள் எதற்காக பிரிந்தனர் என்று தெரியவில்லை. அவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்னையை தீர்த்து வைக்க வீட்டு உரிமையாளர் பிரசாந்த் முயற்சி செய்துள்ளார். இதற்காக சப் இன்ஸ்பெக்டர் கோபால் உதவியை நாடி இருக்கின்றனர். சப் இன்ஸ்பெக்டருக்கு டாக்டருடன் நல்ல அறிமுகம் இருந்தது. அதோடு கோபாலும், பிரசாந்தும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே கோபால் உதவியை பிரசாந்த் நாடியுள்ளார்.
இது தவிர பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பது மற்றும் உடற்தகுதி சான்று கொடுப்பது தொடர்பாக டாக்டருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

அடிக்கடி மருத்துவ அறிக்கை தொடர்பாக பெண் டாக்டரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருந்தபோதிலும், வீட்டு உரிமையாளர் மகன் பிரச்னையில் பஞ்சாயத்து செய்தபோதும் பெண் டாக்டரை சப் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர் அதற்காகத்தான் கடந்த 23 மாதங்களாக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் இன்னும் ஒரு மாதம் பணியாற்றிவிட்டு வெளியில் வந்து எம்.டி. படிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



















