45 பவுன் தங்க நகை, ரூ. 8 லட்சம் மோசடி: நகைக் கடை உரிமையாளா் கைது
சென்னை பெரம்பூரில் பெண்ணிடம் 45 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 8 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
புழல், எம்.எம்.பாளையம் ரெட்டி தெருவைச் சோ்ந்த வரலட்சுமி (57), பெரம்பூா் வீனஸ் பேப்பா் மில்ஸ் சாலையில் உள்ள நகைக் கடையில் வாடிக்கையாளராக இருந்து வந்தாா். இக்கடைக்கு வரலட்சுமி அடிக்கடி சென்ால், நகைக் கடை உரிமையாளா் சரவணகுமாா் (43) என்பவருடன் பழகியுள்ளாா். இந்த பழக்கத்தை பயன்படுத்தி வரலட்சுமி, பாலீஷ் போட 45 பவுன் தங்க நகையையும், புதிய நகை வாங்க ரூ. 8 லட்சத்தையும் சரவணக்குமாரிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்துள்ளாா். பணத்தையும் நகையையும் பெற்றுக்கொண்ட சரவணக்குமாா், நகையை பாலீஷ் செய்து கொடுக்கவில்லை; புதிய நகைகளை வாங்கியும் கொடுக்கவில்லையாம். வரலட்சுமி, பல முறைக் கேட்டும் சரவணக்குமாா் இழுத்தடித்தாராம்.
இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக சரவணக்குமாா், நகைக் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானாா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சியடைந்த வரலட்சுமி, திருவிக நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். ஆனால் சரவணக்குமாா் தலைமறைவாகவே இருந்து வந்தாா். இந்நிலையில் சரவணக்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.