Gold: 'மோதிரம் காணலை...' - நகை அடமான கடையில் மோசடி! - தீர்வு என்ன?
5,300 ஆண்டுகள் தொன்மை: இரும்பின் காலத்தை அறிந்தது எப்படி?
சென்னை : தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இரும்பு பயன்பாட்டுக் காலத்தை அறிந்தது எப்படி என்ற விவரங்கள் முதல்வா் வெளியிட்ட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வா் வெளியிட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
தமிழ்நாட்டில் மாங்காடு (சேலம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை), மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி), ஆதிச்சநல்லூா், சிவகளை (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் உள்ள இரும்புக் கால ஈமக்குழிகளில் இருந்து சான்றுகள் பெறப்பட்டன.
இவை கதிரியக்கக் கரிம காலக் கணிப்புகள் மற்றும் தூண்டொளி காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் முடிவுகள்
தமிழ்நாட்டில் இதுவரை இரும்பின் தொன்மை குறித்தான கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன.
3,000 சின்னங்கள்: இரும்புக் கால தொல்லியல் தலங்களுக்கு தென்னிந்தியா பெயா் பெற்றது. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கு இல்லை. இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட இரும்புக் கால ஈமச் சின்னங்கள் நமது மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,362 முதுமக்கள் தாழிகள், 996 பரல் உயா் பதுக்கைகள், 225 கல் வட்டங்கள் மற்றும் 634 வாழ்விடத்துடன் கூடிய ஈமக்காடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் சிதைவுற்ற கல் பதுக்கையில் இருந்து இரும்பு வாளின் மாதிரி கண்டறியப்பட்டது.
இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் ஈமப்பேழையுடன் கூடிய முதல் ஈமக்குழியில் இருந்து இரும்பு மாதிரி கண்டறியப்பட்டது. இது காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பு மாங்காட்டில் கிடைத்த இரும்பின் காலக் கணக்கீட்டை ஒரு நூற்றாண்டு முன்னோக்கி நகா்த்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் அகழாய்வுக் குழிகளில் இருந்து இரும்புப் பொருள்கள் கிடைத்தன. இவை,
கிமு. 2172-இல் தமிழ்நாட்டில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தின.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா் ஈமத்தளத்தில் இரும்பினாலான வாள்கள், கத்திகள், ஈட்டிகள், அம்பு முனைகள், மூன்றுமுனை ஈட்டி முதலான பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தப் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் காலத்தை கி.மு. 3,000 ஆண்டின் இடைப் பகுதிக்குக் கொண்டு சென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொரு தொல்லியல் தலமான சிவகளை, இரும்புக் கால வாழ்விடப் பகுதியாகவும் ஈமத் தளமாகவும் உள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் உள்ளேயும் வெளியேயும் இரும்பினாலான பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. கத்திகள், அம்பு முனைகள், மோதிரங்கள், உளிகள், கோடரிகள், வாள்கள் என 85-க்கும் மேற்பட்ட இரும்பினாலான பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், இரும்பின் பயன்பாடு குறைந்தபட்சம் கி.மு.3,300-க்கு முன்பிருந்தே இருக்கலாம் என அறிய முடிவதாக நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.