ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!
எமர்ஜென்சி படத்தால் ரகளை! பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்பி குற்றச்சாட்டு!
எமர்ஜென்சி படம் திரையிடலின்போது காலிஸ்தான் பயங்கரவாதிகள் ரகளையில் ஈடுபட்டதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வடமேற்கு லண்டன் தொகுதி உறுப்பினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மேலும், உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே எழுதி இயக்கி நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜன.17ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், வடமேற்கு லண்டன் திரையரங்கில் எமர்ஜென்சி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பிரச்னை குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் பேசியுள்ளார்.
இந்த படத்துக்கு வால்வர்ஹாம்டன், பர்மிங்காம், ஸ்லோ, ஸ்டெய்ன்ஸ் மற்றும் மான்செஸ்டரில் பகுதிகளில் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும், இதன்விளைவாக வியூ மற்றும் சினிவோர்ல்ட் வெளியீட்டு நிறுவனங்கள் திரையிடலை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
மேலும் பிளாக்மேன் பேசியதாவது:
“கடந்த ஞாயிற்றுக்கிழமை எனது தொகுதியில் ஹாரோ வ்யூ திரையரங்கில் எமர்ஜென்சி படத்துக்காக பணம் செலுத்தி பார்வையிட்டனர். சுமார் 30 நிமிடங்களில் முகமுடி அணிந்து உள்ளே நுழைந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் படத்தின் திரையிடலை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தப் படம் சர்ச்சைக்குரியது. படத்தின் தரம் அல்லது உள்ளடக்கம் குறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் சீக்கிய எதிர்ப்பு படம் என்ற கருத்து பிரிட்டனில் நிலவுகிறது.
தணிக்கையாளர்களால் அனுமதிக்கப்பட்ட படங்களைப் பார்க்க விரும்பும் மக்களை அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். திரையரங்குகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன், ஆனால் பார்வைகளை தொந்தரவு செய்யக்கூடாது” என்றார்.
எமர்ஜென்சி திரையிடலுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளில் திரையிடல் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.