இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
50 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஸ்டெல்லா மேரிஸ்' மாணவிகள் ரீ-யூனியன்; ஆனால், ரெண்டு கண்டிஷன்
இருபதாண்டுகள், இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் படித்த பள்ளி, கல்லூரிகளில் ரீ-யூனியன் நிகழ்ந்து பார்த்திருப்பீர்கள். அரை சதம் கடந்த ரீயூனியன் பார்த்திருக்கிறீர்களா? சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் கடந்த வாரம் நடந்தது அப்படியொரு நிகழ்வு.
மும்பை, புனே, பெங்களூரு என இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர் ஸ்டெல்லா மேரிஸின் முன்னாள் மாணவிகள். ஏன், அமெரிக்காவிலிருந்து இந்த ரீ யூனியனில் கலந்துகொள்வதற்காகவே வந்திருந்தார் ரஜினி என்ற அந்த முன்னாள் மாணவி.
ஐம்பதாண்டு கடந்த இந்தச் சந்திப்பு குறித்து அதில் கலந்துகொண்ட கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் ஏஎல்எஸ் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.
''இப்ப எழுபதுகள்ல இருக்கிற நாங்க எழுபதுகள்ல ஸ்டெல்லா மேரிஸ் ஸ்டூடண்ட்ஸ் (1972 முதல் 1975 ம் ஆண்டு வரை) பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சோம். மொத்தம் 32 பேர்னு நினைக்கிறோம். அதுல மூணு பேர் இப்ப இல்ல.
எல்லாரையயும் போலவே நாங்களும் காலேஜ் முடிஞ்ச அடுத்த சில வருஷங்கள்லயே ஒருத்தருக்கொருத்தர் தொடர்பு எல்லைக்கு வெளியில போயிட்டோம்தான். ஆனா வாட்ஸ் அப் வந்த பிறகு எங்கள்ல சிலரிடையே தொடர்பு கிடைச்சது. ஒரு வாட்ஸ் அப் குரூப் ஃபார்ம் பண்ணி எல்லாரையும் சேர்க்கத் தொடங்கினோம். ரெண்டு மூணு வருஷ முயற்சிக்குப் பிறகு அந்த மூணு பேரைத் தவிர்த்து எல்லாரையும் தேடிப் பிடிச்சுட்டோம்.
அதையே பெரிய சாதனையா குரூப்ல சிலாகிச்சிட்டிருந்தப்பதான் நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி, நாம படிச்சு முடிச்ச 50 வது ஆண்டு வருதுங்கிற ஞாபகம் வர அப்ப இருந்தே ப்ளானைத் தொடங்கிட்டோம்.
தொடங்கும்போதே ரெண்டு கண்டிஷன் போட்டோம். முதலாவது கன்டிஷன் இப்ப இருக்கிறவங்க எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கணும்கிறதுதான். அடுத்தது, ரீ யூனியன்ல 'கூடுமானவரை அவங்கவங்களுடைய நடப்பு நிலைமை குறித்துப் பேசாம பழைய நினைவுகளை அசைபோடணும்கிறது.
இப்ப என்ன பண்ணிட்டிருக்கோம், யாருக்கு எத்தனை புள்ளங்க, அவங்க என்ன பண்றார்ங்கிறதையெல்லாம்தான் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்ச நாள்ல இருந்துதான் பேசிட்டுதானே இருக்கோம்?
ஆக, ப்ளானை எக்ஸிகியூட் பண்ணித் திட்டமிட்டபடி தொடங்குச்சு எங்க 'பேக் டு ஸ்டெல்லா மேரிஸ்' ட்ரிப்.
ரெண்டு நாள் ட்ரிப்பின் முதல் விசிட் கல்லூரிதான். நாங்க கும்பலா ஒரு பஸ் எடுத்துகிட்டு காலேஜ்ல போய் இறங்கினதும், கேம்பஸ்ல இருந்த ஸ்டூடன்ட்ஸ் சிலர், செமினார் ஏதோ நடக்குதுன்னு நினைச்சிட்டாங்கபோல, எங்களையெல்லாம் புரபசர்ஸ்னு நினைச்சிட்டாங்க. நாங்க ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்னு சொன்னதும் எங்க கூட ரொம்பவே ஒட்டிக் கிட்டாங்க.
தொடர்ந்து எல்லாரும் கல்லூரியின் பிரின்சிபல் ஸ்டெல்லா மேரியைச் சந்திச்சோம்.
'நீங்க இங்க படிச்சிட்டிருந்தப்ப நான் பொறக்கவே இல்ல'னு சொன்ன அவங்க எங்களை நல்லபடியா உபசரிச்சதோட நாங்க படிச்ச வகுப்பறைகளுக்கு எங்களைக் கூட்டிட்டுப் போய் போட்டோஸ்லாம் எடுத்து சில மணி நேரம் எங்கக் கூடவே இருந்து வழியனுப்பி வச்சாங்க'' என்றார் இவர்.
கல்லூரி விசிட் முடிவடைந்ததும் நேராக இந்த கேங் சென்ற இடம் மகாபலிபுரம். இவ்ளோ வருஷம் கழிச்சு சந்திக்கிறப்ப அதை ஒரு ஸ்வீட் மெமரி ஆக்க வேண்டாமா, அதான்' என்றபடி பேசத் தொடங்கினார் லெனி. இவர் பிரபல லிஃப்ட் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் கம்பெனியின் உரிமையாளராம்.
'அங்க ஒரு நாள் தங்கி பழைய நினைவுகளை அசைபோட்டோம். கல்லூரி நாட்கள்ல பண்ணின சேட்டைகள் தொடங்கி, பேராசிரியர்களிடம் வாங்கின வசவு, எடுத்த மார்க்ன்னு ஒவ்வொருத்தரா பேசிகிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலை.
புருஷன், புள்ளைங்கன்னு குடும்ப உறுப்பினர்களுக்கு நோ என்ட்ரி சொல்லிட்டதால் பழைய விஷயங்கலை எடிட் வெர்ஷன் இல்லாம பேசிட்டிருந்தோம். மொத்தத்துல இந்த ரெண்டு நாள் அனுபவம் இன்னொரு 50 வருஷத்துக்குத் தாக்குப் பிடிக்கும்னு சொல்லலாம்' என்றார் இவர்.
கலந்து கொண்டவர்களின் சுபாஷினி வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவராம். ஜானகி ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சீதாலட்சுமி ஆசிரியையாக பணிபுரிந்தாராம்.
ரீ-யூனியனின் கடைசி நாள் நிகழ்வில் படித்தபோது வகுப்பு லீடராக இருந்த ராஜலட்சுமி நன்றியுரை நிகழ்த்த மீண்டும் ஒரு ஃபேர்வெலை நடத்திவிட்டு ஆனந்தக் கண்ணீருடன் அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர் இவர்கள்.