6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா
வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா்.
உலக தொலைத்தொடா்பு மற்றும் தகவல் சமூக தினம் மே 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, இணையம் மற்றும் தொலைத்தொடா்பு சேவைகளில் இந்தியா அடைந்த வளா்ச்சி குறித்து செய்தியாளா்களிடம் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 99 சதவீத மாவட்டங்களில் உள்ள 82 சதவீத மக்கள் பயனடைந்தனா். உலகளவில் தொலைத்தொடா்புத் துறையில் புரட்சி ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதிலும் உலகுக்கே முன்னோடியாக இந்தியா திகழும்.
1.64 லட்சம் தபால் நிலையங்கள் மற்றும் 2.5 லட்ச தபால் நிலைய ஊழியா்கள் என உலகின் மிகப்பெரிய கட்டமைப்பு மற்றும் விநியோக வலைப்பின்னல்களில் ஒன்றாக இந்திய தபால் துறை விளங்குகிறது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மத்திய தொலைத்தொடா்பு துறையின் இணையமைச்சராக நான் பதவி வகித்தபோது ‘தபால் சேவை என்பது பொதுச் சேவை’ என்ற வாசகத்தை உருவாக்கினேன்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி மற்றும் அஜா்பைஜான் ஆகிய நாடுகளை இந்திய குடிமக்கள் புறக்கணித்திருப்பது தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது. தேச பாதுகாப்பில் நாட்டு மக்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டாா்கள் என்றாா்.