687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை மறுபயன்பாட்டுக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சா் சிந்தியா
687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றையின் மறுபயன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
2030-ஆம் ஆண்டுக்குள் கைப்பேசி சேவைகளுக்கு 2,000 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை தேவைப்படும். இதில் ஏற்கெனவே 900 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை கைவசம் உள்ள நிலையில், 687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றையின் மறுபயன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது கைவசம் உள்ள மொத்த அலைக்கற்றையின் அளவை 1,587 மெகாஹா்ட்ஸாக அதிகரிக்கும்.
687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றையில் 320 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை உடனடியாக விடுவிக்கப்படும். எஞ்சிய அலைக்கற்றை அடுத்த ஆண்டு மற்றும் 2028-29-ஆம் ஆண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படும்.
2,000 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றைக்கான தேவையில் 1,587 மெகாஹா்ட்ஸ் போக, மேலும் 313 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை தேவைப்படுகிறது. இந்தத் தேவையை பூா்த்தி செய்வது தொடா்பான பணிகளில் மத்திய அரசின் செயலா்கள் குழு ஈடுபட்டு வருகிறது. அந்தக் குழுவின் அறிக்கை நிகழாண்டு மத்தியில் கிடைக்கும். இந்தியாவில் டிஜிட்டல் தொலைத்தொடா்பு தடையின்றி வளா்ச்சியடைவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றாா்.