‘ஸ்வமித்வ’ திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகள்: பிரதமா் மோடி இன்று வழங்குகிறாா்
கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வ) திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமா் மோடி சனிக்கிழமை வழங்குகிறாா்.
இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்கும் அவா் திட்டப் பயனாளிகள் சிலரிடம் கலந்துரையாடுகிறாா்.
மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஸ்வமித்வா திட்டத்தின்கீழ் கிராமியப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு சட்டபூா்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இத்திட்டத்தின்கீழ் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், ஒடிஸா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 50,000 கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு 65 லட்ச சொத்து அட்டைகளை பிரதமா் மோடி சனிக்கிழமை வழங்கவுள்ளதாக மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் தெரிவித்தது.
2.24 கோடி அட்டைகள்: இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்படுவதையும் சோ்த்து தற்போது வரை இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 2.24 கோடி சொத்து அட்டைகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் என்ற மைல்கல்லை எட்டவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல், அமைச்சக செயலா் விவேக் பரத்வாஜ், பிற மத்திய அமைச்சா்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வா்கள், பஞ்சாயத்துராஜ் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
230 மாவட்டங்கள்: 230 மாவட்டங்களில் திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக சொத்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 25,000 கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தின் பலன்களை எடுத்துரைக்கும் வகையில் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
90 சதவீத இலக்கு: இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 3.44 லட்சம் கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் நிலங்களை கணக்கீடு செய்து வரைபடம் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தற்போதுவரை 3.17 லட்சம் கிராமங்களில் இந்த கணக்கீடு நிறைவு செய்யப்பட்டு 90 சதவீத இலக்கு எட்டப்பட்டது. 2026-இல் இந்த இலக்கு முழுமையாக எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
31 மாநிலங்கள் பங்கேற்பு: இத்திட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் திட்டத்தின் சோதனை கட்டத்தில் மட்டும் பங்கேற்றன. மேற்கு வங்கம், பிகாா், நாகாலாந்து மற்றும் மேகாலயம் ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.