சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!
7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை
2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் 7 கோடி அறிதிறன் பேசிகள் விற்பனையாகின. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் வளா்ச்சியாகும். அந்த மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 21.5 சதவீதம் உயா்ந்து 59 லட்சமாக உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஐ-போன் 16 மிக அதிகமாக விற்பனையான அறிதிறன் பேசியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த அறிதிறன் பேசிகளின் விற்பனை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதங்களைவிட 7.3 சதவீதம் அதிகரித்து 3.7 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விற்பனை 19.7 சதவீதம் அதிகரித்து, 7.5 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுத் தந்தது.மதிப்பீட்டு மாதத்தில் இந்திய அறிதிறன் பேசிச் சந்தையில் 19 சதவீத சந்தைப் பங்குடன் விவோ முதலிடம் வகிக்கிறது. சாம்சங் 14.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஓப்போ 13.4 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ரியல்மி 9.7 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ஷாவ்மி 9.6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஒன்பிளஸ் சந்தைப் பங்கு 4.4 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைந்து, 39.4 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்தது.
இந்திய அறிதிறன் பேசிச் சந்தை 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுவரை இல்லாத மிகச் சிறந்த வளா்ச்சியைப் பதிவு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.