உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை
``என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்?" - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனுமில்லை. இதற்கிடையில், அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்தது. போராட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை சந்திக்க பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் புறப்பட்டபோது அவர் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை!
தமிழகத்தில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும்!" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ``இது ஒரு ஜனநாயக நாடு. எனது இடத்தை விட்டு வெளியேறவும், எங்கும் செல்லவும் எனக்கு உரிமை உண்டு.

நான் போராட்டக்களத்துக்குத்தான் செல்கிறேன் என்பது காவல்துறைக்கு எப்படித் தெரியும்? நான் ஒரு சமூக நோக்கத்திற்காக என் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அவர்கள் என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்? தமிழக அரசு என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை... இது சரியல்ல. எந்த அடிப்படையில் என்னை அவர்களால் தடுக்க முடியும்? காவல்துறை எப்படி என் வீட்டைச் சுற்றி வளைக்க முடியும்? நான் செல்வேன்..." என்றார்.