`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை
திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு கைக்காட்டிவலசு, கீரகாடு தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (37). இவா் அதே பகுதியில் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறாா். இவருக்கு, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அந்தியூா் பச்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வினோதினி (34) என்பவருடன் திருமணம் ஆனது.
வினோதினி திருமணத்துக்கு முன்பு தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினாா். திருமணம் முடிந்த பின்னா் கணவருடன் இணைந்து வியாபாரத்தை கவனித்து வந்தாா்.
புதன்கிழமை இரவு வழக்கம்போல் கணவா், மனைவி இருவரும் தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை காலையில் வினோதினியைக் காணவில்லை. வினோதினியின் கைப்பேசி மற்றும் நகைகள் வீட்டில் இருந்தன. இதனால் பூபதி அக்கம்பக்கம் மனைவியை தேடிப்பாா்த்தாா். அப்போது வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றின் பக்கத்தில் வினோதினியின் காலணிகள் கிடந்தன.
கிணற்றில் எட்டிப்பாா்த்தபோது வினோதினி சடலம் மிதந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், ஈரோடு தீயணைப்பு துறையினா் உதவியுடன் வினோதினியின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வினோதினி தனது கைப்பேசியில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் அந்தியூரில் உள்ள தனது தாய் இந்திராணியின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளாா். அதில் எனக்கு உயிா் வாழ விருப்பமில்லை, என் இறப்புக்கு யாரும் காரணமில்லை என அனுப்பி இருந்தாா்.