புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
Stray Dogs: ``ஒன்னும் புரியல; நாட்டை நினைச்சு வெட்கப்படுறேன்'' -கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சதா
டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்திருந்தன.
உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது.
10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை சதா கண்ணீர்விட்டு அழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “6 வயது குழந்தை இறந்ததற்கு காரணம் ரேபிஸ் நோய் இல்லை என்பது நிரூபணம் ஆன பிறகும் கூட, நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சுமார் 10 லட்சம் நாய்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த நாய்கள் அனைத்திற்கும் காப்பகங்களை உருவாக்குவதற்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் போதுமானதாக இருக்காது.
அது போக இவ்வளவு குறுகிய காலத்தில் காப்பகங்களை ஏற்பாடு செய்வது சாத்தியமற்றது. இந்த நடவடிக்கை மேற்கொண்டால் நாய்கள் பெருமளவில் கொல்லப்படும் சூழல் உருவாகும்.
தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் தான் காரணம். அவர்கள் தான் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யாமல் விட்டுவிட்டனர்.
விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த திட்டத்திற்கு சரியான பட்ஜெட் ஒதுக்கப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று நாம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.

என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த அதிகாரிகளை அணுகுவது, எங்கு சென்று போராடுவது எனத் தெரியவில்லை.
ஆனால் நான் சொல்லக்கூடியது ஒன்றுதான். இந்த உத்தரவு என்னை மனரீதியாக கொல்கிறது. இது சரியான நடைமுறையே கிடையாது. நம் நாட்டை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
நம்மை சுற்றி இருப்பவரை நினைத்தும் இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன் ஒன்றுக்கு இருமுறை யோசிக்காதவர்களை நினைத்தும் வெட்கப்படுகிறேன்.
தயவுசெய்து இந்த உத்தரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருக்கிறார்.