பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
Coolie Review: ரஜினி - லோகேஷ் `பவர்ஹவுஸ்' காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்... படமாக எப்படி?
விசாகப்பட்டின துறைமுகத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களை வைத்து, சர்வதேச அளவில் சட்டவிரோதமான தொழில்களைச் செய்து வருகிறார் சைமன் (நாகர்ஜுனா). சைமனுடைய விசுவாசியான தயாள் (சௌபின் ஷாஹிர்), மொத்த துறைமுகத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வலது கையாக இருக்கிறார்.
இந்நிலையில், சைமன் தனக்காக வேலை செய்ய அழைத்து வரும் விஞ்ஞானி ராஜசேகரை (சத்யராஜ்) யாரோ கொலை செய்கிறார்கள். அச்செய்தி மேன்ஷன் நடத்தி வரும் அவரின் நண்பர் தேவாவிற்கு (ரஜினிகாந்த்) தெரிய வருகிறது. ப்ரீத்தி (ஸ்ருதி ஹாசன்) உள்ளிட்ட ராஜசேகரின் மூன்று மகள்களுக்கும் பிரச்னை வரும் என்பதை அறியும் தேவா அவர்களைக் காக்கவும், நண்பனின் கொலைக்கான காரணத்தை அறியவும், சைமனிடம் வேலைக்குச் சேர்கிறார்.
ராஜசேகரைக் கொன்றது யார்? உண்மையில் தேவா யார் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் 'கூலி'.

சின்ன சின்ன நையாண்டிகள், ஸ்டைலான ஆக்ஷன் - டான்ஸ், எமோஷன் காட்சிகளில் அனுபவம் எனப் படத்தின் பவர் ஹவுஸாக மிளிர்கிறார் ரஜினிகாந்த். மாஸ் காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களைக் கவர்கிறார். ரஜினிகாந்த்தோடு மோதும் இடங்களிலும், தனியாகவும் பல காட்சிகளை வீரியமாக்கி 'தயாளன்' கதாபாத்திரம் ஆழமாகிக்கொண்டே இருக்கிறது. அதுவும் இரண்டாம் பாதியில் வேறொரு பரிமாணத்தில், ஆற்றாமை, வஞ்சம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டி கோடம்பாக்கத்தில் அழுத்தமாக அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார் சௌபின் ஷாஹிர்.
எமோஷன் மீட்டரைக் கடைசி வரைக்கும் இறங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறார் ஷ்ருதிஹாசன். ஸ்டைலிஷ் வில்லனாக, சின்ன சின்ன மேனரிஸத்தால் படத்திற்கு வலுசேர்க்கிறார் நாகர்ஜுனா. அதிரவைக்கும் கொலைகள் தொடங்கி 'I am the Danger' பாடல் டான்ஸ் வரை க்ளாஸான அதிரடி வில்லனாக அவரின் நடிப்பு மிரட்டல்!
விஞ்ஞானியாக வரும் சத்யராஜ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் உபேந்திராவுக்கு மனதில் நிற்கும்படியான காட்சிகள் இல்லை. ரக்ஷிதா ராம், கண்ணா ரவி ஆகியோர் மட்டும் மனத்தில் நிற்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில், ஆமிர் கான் குறுகிய நேரத்துக்கு வந்து வைப் செய்து போகிறார். ஆக்ஷன், பரபரப்பு, பிரமாண்டம் என எல்லா கண்டெய்னரையும், தன் நேர்த்தியான ஒளிப்பதிவால் நிறைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன். இரவு நேரக் காட்சிகள் மற்றும் துறைமுகக் காட்சிகளின் தரத்தை வீரியமாக்கும் கிரீஷின் கேமராவிற்கும், படத்தின் திரைமொழிக்கும் பிலோமின் ராஜின் பொருத்தமான கட்கள் கைகொடுத்திருக்கின்றன.

அனிருத் இசையில், 'சிகிட்டு', 'மோனிக்கா' பாடல்கள் அரங்கம் அதிர உதவியிருக்கின்றன. 'பவர் ஹவுஸ்', 'கூலி டிஸ்கோ', 'ஐ அம் தி டேஞ்சர்' போன்ற பின்னணி இசை ட்ராக்குகளால், ஆக்ஷன் காட்சிகளோடு சேர்த்து மொத்த படத்திற்கும் பவர் ஏற்றியிருக்கிறார்.
பின்கதைகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு காட்டப்படும் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோரின் டீஏஜிங் காட்சிகள் முழுமையான திரையனுபத்தைத் தருகின்றன. இளமையான குரலுக்கும் மெனக்கெட்டிருப்பதற்குப் பாராட்டுகள்!சௌபின் ஷாஹிர் கதாபாத்திரம், சத்யராஜின் கண்டுபிடிப்பு எனக் களமாகச் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது திரைக்கதை. துள்ளலான பாடலோடு ரஜினிகாந்த்தின் வருகைக்குப் பிறகு, நேரடியாகக் கதைக்குள் நுழைகிறது படம். துறைமுகத்திற்குப் பின்னாலுள்ள சட்டவிரோத பின்னல்கள், அதை ரஜினிகாந்த் கண்டுபிடிக்க முயல்வது என விறுவிறுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பாடல், நடனம், காமெடி, சேட்டைகள் என அவரின் ஒன்மேன் ஷோ ரசிக்கவும் வைக்கிறது.

ஆனால், விறுவிறுப்பையும், ஷோவையும் சிறிது சிறிதாக இறங்க வைக்கிறது திரைக்கதை. முந்தைய காட்சியின் கடைசியில் முழுமையில்லாமல் கட் வைப்பது, அடுத்த காட்சியில் அதை ட்விஸ்ட்டாகச் சொல்வது என யூகிக்கும்படியாக திருப்பங்களை நீட்டி நீட்டி நெளித்திருக்கிறது திரைக்கதை. இடைவேளைக்கு முன்பு வரும் ட்விஸ்ட், சௌபின் ஷாஹிரின் கதாபாத்திர மாறுதல்கள் கச்சிதமாகத் தரையிறங்கியிருக்கின்றன.இரண்டாம் பாதி தொடக்கத்திலிருந்தே நேர்கோட்டில் ஏற்றயிறக்கங்களும் புதுமையுமில்லாமல் நகர்கிறது.
பிரதான வில்லன்கள் நிறைய பேர் இருந்தும், கதாநாயகன் ரஜினிகாந்த்திற்குச் சவால் தரும் வகையில், விறுவிறு காட்சிகள் போதுமான அளவு இல்லாமல் அயர்ச்சியுடனேயே படம் நகர்கிறது. எளிதாகக் கதாநாயகன் எல்லாவற்றையும் வெல்வது, முதற்பாதியிலேயே யூகித்துவிட்ட ட்விஸ்ட்டுகளை இரண்டாம் பாதி வரை இழுத்தது, லாஜிக் ஓட்டைகள் எனத் திரைக்கதை கண்டெய்னர்கள் தட தடக்கத் தொடங்குகின்றன.

ரஜினிகாந்த்தின் ஸ்டைலிஷ் ஆக்ஷன், சௌபின் ஷாஹிர் மற்றும் அவரின் மனைவி கதாபாத்திரங்களின் சுவாரஸ்யமான பின்கதை, ரஜினிகாந்த் சொல்லும் பின்கதை, டீஏஜிங் காட்சிகள் போன்றவை மட்டுமே ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. ஆமிர் கானின் ரகளையான தோற்றம் ரசிக்க வைத்தாலும், படம் முழுவதும் கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு நியாயம் செய்யாமல், அக்கதாப்பாத்திரம் வெறுமென வந்து போவது ஏமாற்றமே! பிணத்தை டிஸ்போஸ் செய்ய அறிவியல் புராஜெக்ட் கணக்கான இயந்திரத்தின் அவசியம் என்ன என்பதற்கும் வலுவான காரணமில்லை. ஆக்ஷன் கப்பலில் ஆங்காங்கே எமோஷன் கொக்கிகளை இறக்கிய கையோடு, கதையில் தேவையான ஆழத்தையும், திரைக்கதையில் சுவாரஸ்யமான புதுமைகளையும் சேர்த்திருந்தால், இந்தக் 'கூலி' கலக்கல் கோல்டு வாட்சாக பளபளத்திருப்பார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...