Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கொட்டையூர் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதிகள் செய்து தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஏலகிரி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களைச் சந்தித்தார். அங்குள்ள மக்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
ஏலகிரி மலைப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளதா? அங்கு மருத்துவர்கள் தினமும் வருகிரார்களா? என்று அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது, 4 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதில்லை என்று அப்பகுதியில் உள்ள மக்கள் புகார் கூறினர்.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இப்போது பல்வேறு குறைகள் இருப்பதாகவும் புகார் கூறினர்.
கல்லூரி மாணவிகளை அருகில் அழைத்து அவர்கள் என்ன படிக்கிறார்கள்? என்றும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்றும் விசாரித்தார். அங்குள்ள மக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அவர்களிடம் பேசிய அவர்,
"மலைவாழ் மக்களின் தேவைகளை மனு மூலமாக கொடுத்துள்ளீர்கள். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு உங்கள் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் நடமாடும் மருத்துவமனை இப்பகுதியில் செயல்பட்டு வந்தது. அம்மா மினி க்ளினிக்கை திறந்தோம். அதை இந்த ஆட்சியில் மூடிவிட்டார்கள். மலைவாழ் மக்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்க வசதியாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தோம்.
அதிமுக அரசு அமைந்தவுடன் இப்பகுதியில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்படும். இங்குள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.