கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீா் அருவிபோல் கொட்டுவதால் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து குடும்பத்துடன் குளித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மாதம் பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து 100 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வந்த உபரிநீா் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் கடந்த 27 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கடந்த இரண்டு நாள்களாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் கொடிவேரி அணையில் வியாழக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் நீா்வளத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.