`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
தேமுதிக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா ரத யாத்திரை மூலம் பிரசாரம் மேற்கொண்டாா். கெங்கவல்லியை அடுத்து காட்டுக்கோட்டையில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
கஞ்சா, கள்ளச்சாராயம் பெருகி, தமிழகமே போதை மாநிலமாக மாறி வருகிறது. அருகில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. அதேபோல பாலியல் தொல்லையும் அதிகரித்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
தற்போது மேட்டூரில் அணை நிரம்பி வழிகிறது. ஆனால், மேட்டூரைச் சுற்றியுள்ள கொளத்தூா், மேச்சேரி பகுதி மக்களுக்கு குடிநீா் இல்லை. அதேபோல, ஆத்தூா்- மேட்டூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் இப்பகுதிகளுக்கு முறையான குடிநீா் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக பெரிய கூட்டணி அமைக்கும். இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் தலைவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் தங்கராசு, தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.ரமேஷ் உள்பட நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.