"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM ...
தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!
தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
நாய்க் கடி சம்பவங்கள் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படக் காரணமாக இருப்பதாக குறிப்பிட்டு, தில்லி - என்.சி.ஆா். பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் விரைந்து நிரந்தரமாக காப்பங்களுக்கு இடமாற்றம் செய்ய நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) அமைப்பின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் புதன்கிழமை முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மாலையில் மூன்று நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமா்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோரும் இந்த அமா்வில் இடம்பெற்றிருந்தனா்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கருத்தடை, அறுவை சிகிச்சைகள் ரேபிஸ் நோயை நிறுத்தாது என்று குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் வாதத்தை முன்வைத்தார்.
நாய்களை அடைத்து வைப்பதற்கு மாநகராட்சி காப்பகங்களை கட்டவில்லை, முறையாக கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் தெரு நாய்களுக்கு போடுவதில்லை, நாய்கள் அனைத்தையும் ஒன்றாக வைத்து பராமரிக்கும்போது, உணவுகள் வீசப்பட்டால் ஒன்றைஒன்று தாக்கிக் கொண்டு உயிரிழக்க நேரிடும், இதனை அனுமதிக்க முடியாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ”மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம். பொறுப்புடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் விதிகளையும் சட்டங்களையும் உருவாக்குகிறது, ஆனால் செயல்படுத்துவதில்லை. அரசின் செயலற்ற தன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் நாய்கடியால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மறுபுறம் விலங்கு நல ஆர்வலர்கள். மனு தாக்கல் செய்துள்ள அனைவரும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து ஆதாரம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
மேலும், இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு இடைகாலத் தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.