தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!
ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெரு நகரங்களில், ஆகஸ்ட் 1 முதல் வங்கிக் கணக்குத் தொடங்கும் புதிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு சராசரி என்பதை ரூ.50,000 ஆக வைத்திருக்க வேண்டும் என்று மாற்றியிருந்தது. முன்பு ரூ.10,000 ஆக இருந்தது.
இதேபோல், புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்குத் தொடங்குவோருக்கான இருப்புத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரு.25,000 ஆகவும், கிராமப் பகுதிகளில் ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10,000 ஆகவும் நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், சாமானிய மக்களுக்கான வங்கி என்ற நிலையிலிருந்து தடம்மாறுவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது.
இந்த நிலையில், தனது முந்தைய அறிவிப்பை திரும்பப் பெற்ற ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம், புதிய மினிமம் பேலன்ஸை அறிவித்துள்ளது.
அதன்படி, நகரப் பகுதிகளுக்கு ரூ. 15,000, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ. 7,500 மற்றும் கிராமப் பகுதிகளுக்கு ரூ. 2,500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.