வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்
வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா்.
ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்து விதமான வரி மற்றும் வா்த்தக ஒப்பந்தங்களை இறுதிசெய்வது தொடா்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் இவ்வாறு பதிலளித்தாா்.
முன்னதாக, இந்தியா மீதான 25 சதவீத வரியை அமெரிக்கா ஏற்கெனவே அமல்படுத்திவிட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக மேலும் 25 சதவீத வரி வரும் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை நடத்த ஆக. 25-ஆம் தேதி அமெரிக்க குழு இந்தியா வர உள்ள நிலையில், இந்த வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தாா்.
அதேபோல் சீனா மீதான பரஸ்பர வரிவிதிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்த நிலையில், அதை 90 நாள்களுக்கு டிரம்ப் ஒத்திவைத்தாா்.