சென்னையின் நிசப்தமான இரவுகளும் நீளமான பயணங்களும் : போராட்டம், நம்பிக்கை கலந்த காவியம் | #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சினிமா மூலம் அறிமுகமான மெட்ராஸ்
“சென்னை” என்று இப்போது அனைவரும் அழைக்கும் இந்த நகரம்,என் மனதில் முதலில் பதிந்தது “மெட்ராஸ்” என்ற பெயரில் தான். பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு அந்நகரம் என்றால் சினிமாவின் காட்சிகள் தான் முதலில் மனக்கண் முன் விரியும்.அந்த காட்சிகளில் தெரிந்த மெட்ராஸ் பரந்த சாலைகள்,கடற்காற்றில் திளைக்கும் மெரினா,அனைத்தும் எனக்கு புதுமையானது.
பல படங்களில் நகரம் தன் அழகை காட்டிக் கொண்டிருந்தபோதும், “நான் ஒரு நாள் அங்கே போவேனா” என்ற எண்ணம் என்னுள் எழவே இல்லை. ஆனால்,விதி ஒரு நாள் என் பாதையை அங்கு இட்டுச் சென்றது.”இங்கே தான் உனக்கு ஒரு கதையுண்டு” எனக் கிசுகிசுத்தன.
சென்னையில் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஒரு வீட்டில், ஒருவரை சுற்றிலும் மேஜைகளில், அலமாரிகளில் 100 புத்தகங்கள் சூழ்ந்திருக்க, ஒரு கால் வைக்கக்கூட இடமில்லாத அளவிற்குத் தரையிலும் ஏராளமான புத்தகங்கள் அருகில் வைக்கப்பட்டிருக்க, அனைத்துத் திசைகளிலும் புத்தகங்கள் சூழ, நடுவில் ஒரு எளிய மனிதராக எழுத்தாளர் பிரபஞ்சன் என் அருகில் உட்கார்ந்திருந்தார்.

இன்று நான் தைரியமாக எழுதுகிறேன் என்றால்,அதற்கு ஒரு காரணம் அவரே. முதல் முறையாக அவருடைய வீட்டிற்கு சென்றபோது, அவர் எனக்கு தங்கமுலாம் பூசிய ஒரு பேனாவை பரிசாக அளித்தார்.
அது இன்றும் என் வீட்டில் பாதுகாப்பாக உள்ளது.” எழுது, நிறைய எழுது, எழுதும் மனிதன் தன்னையே காப்பாற்றிக் கொள்வான்” என்றார். அப்போது அந்த வார்த்தையின் ஆழம் எனக்கு புரியவில்லை. ஆனால், இன்று நான் எழுதும் ஒவ்வொரு வரியிலும் அந்த பேனாவின் நுனி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பிறகு ஒரு நாள் என் பெரியப்பா திரு.பாரதி கிருஷ்ணகுமார் என்னை இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது நான் பேசாத அமைதியான குழந்தை. என் பெரியப்பா சிரித்துக் கொண்டு “தொட்டாச்சினுங்கி பாப்பா, நீ இவர்கிட்ட பேசுறியா இல்லையான்னு பார்ப்போம்”என்று கிண்டல் கலந்த சவால் விட்டார். அந்த நேரத்தில் பேசியது என் வாழ்க்கையின் விசேஷ தருணங்களில் ஒன்று.
பிரபஞ்சன், பாரதிராஜா போன்ற ஆளுமைகளால் கிடைத்த எழுத்து மற்றும் கலை ஊக்கம்
“தாஜ்மஹால்” படத்தின் கடைசி காட்சியில் வரும் ஒரு வசனத்தை அப்படியே சொன்னேன்.அதைக் கேட்டு அவர் “டேய்,என்னடா இவ இப்பவே இப்படி பேசுறாளே,இவ ஒரு நாள் பெரிய எழுத்தாளராக புகைப்படக் கலைஞராக மாறுவாள்” என்றார். அதே நாளில் எனக்கு ஒரு கேமிராவைக் கொடுத்து எங்களை புகைப்படம் எடு என கூறினார்.அந்த சொல்லின் சுமை கேமராவின் எடையை விட அதிகமாக இருந்தது.
நான் எடுத்த முதல் புகைப்படம் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ். அந்த புகைப்படம் என் நினைவுக் கண்களில் இன்னும் பசுமையாக சூழ்ந்துத் திகழ்கிறது.அன்றைய நாள் முதல் என் பார்வையில் மெட்ராஸ் சின்ன சின்ன கதைகளாய் பிரிந்தது. பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்ணின் முகபாவம், மெரினா மணலில் ஓடும் சிறுவனின் பாத அடிகள், தெரு நாயின் தூக்கத்தில் ஒளிந்திருக்கும் அமைதி.
மெட்ராஸின் பழைய வாசனைகள் அனைத்தும் எனது அப்பா சுவாமிநாதன் வழியே எனக்குத் தெரிந்தவை. அந்த காலம் ஆரோக்கியம் நிறைந்த பரவசம் ஊட்டும் காலங்கள்.

என் அப்பாவின் அம்மா ஆச்சி ஆவுடையம்மாள். அப்போது அசோக் நகர், வடபழனி,சூளைமேடு பகுதிகளில் வசித்து வந்தார். வெளியேப் பார்த்தால் அழகான வீடு. ஆனால்,உள்ளே ஒரு மங்கலான இருள்.அந்த வீட்டின் மேல்மாடி வறுமையின் அமைதியால் நிறைந்திருந்தது.பள்ளி அரையாண்டு,காலாண்டு விடுமுறைகளில் நான் திருவண்ணாமலையிலிருந்து வந்து அந்த வீட்டில் தான் தங்குவேன்.
அசைன்மென்ட் எழுதிக்கொண்டு சென்னையின் சலசலப்பில் சில நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டிய நேரம் வந்துவிட்டால்,மனம் கனந்துவிடும். ஆனால், இந்த நகரம் எனக்கு கொடுத்த மிகப்பெரியப் பரிசு: கலை மற்றும் இலக்கிய நினைவுகள், புகைப்படக்கலை, எழுத்தின் நம்பிக்கை,ஆளுமைகளின் அரவணைப்பு அனைத்தும் இங்கே கிடைத்தன.என் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இந்த நகரத்தோடு பிணைந்திருக்கின்றன.
அது சினிமா திரையின் கனவாக தொடங்கி,நிஜ வாழ்க்கையின் அன்பும் போராட்டங்களும் கலந்த ஒரு அனுபவமாக இன்று நிலைத்திருக்கிறது.
இரவுகளில் மெரினாவில் கிடைத்த ஆறுதல்
வடபழனியில் இருக்கும் “பிரசாத் ஸ்டுடியோ”. எத்தனை முறை அந்த வாசல் அருகே அமர்ந்திருக்கிறேன். சில நேரங்களில் பசியையும், தாகத்தையும் மறந்து கொண்டு அங்கேயே கழித்திருக்கிறேன். அங்கிருந்த அந்த சாலைகள், அந்த மூலைகள் இன்றும் எனக்குத் தெரிந்த முகங்களாக இருக்கின்றன.அங்கேயே ஒரு காலத்தில் பெட்ரோல் பங்கில் வேலைப் பார்த்ததும் உண்டு. பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலிருந்து எனக்கு எங்கு தோன்றுகிறதோ அங்கேயே இறங்கி விடுவேன்.
நிலையங்கள் மாறி மாறி எலக்ட்ரிக் ரயிலில் நான் செய்த அந்த பயணங்கள் ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தன. அந்த பாதையில் சந்தித்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு சிறு துண்டை எனக்குக் கொடுத்துச் சென்றனர். சிலர் சொல்லிய கதைகளாக, சிலர் முகத்தில் மறைந்திருந்த சிரிப்பாக,சிலர் கண்களில் தேங்கியிருந்த கனவுகளாக. அந்த சந்திப்புகள் அனைத்தும் என் மனதில் சேமித்து வைத்தேன். ரயில் நிலையங்களில் கிடைத்த டிக்கெட்டுகளை கூட நினைவுச் சின்னமாக பாதுகாத்தேன்.யாருமில்லாத நடு இரவில் பீச் ஸ்டேஷன் வரை சென்று வருவது.
எனக்கு வெறுமனே ஒரு பயணம் அல்ல. அது நகரின் உறக்கத்தை கிழித்து,அதன் இரவின் ரகசியங்களை கேட்டு வருகிற ஒரு தன்னலம் கற்றுக்கொள்ளும் நடைப்பயிற்சி போல இருந்தது. மெரினா:பெரும்பாலருக்கு அது ஒரு சுறுசுறுப்பு இடம்,ஆனால் எனக்கு அது ஒரு உயிர் உறவாகவே மாறிவிட்டது.

ஆறு மாதங்களுக்கு மேல் அந்த இரவுகளில் போலீசாரின் விசாரணையும் தவறான நோக்கத்தோடு வரும் ஆண்களின் தொந்தரவுகளும் இருந்தன. அப்போது என்னை பாதுகாத்தவர்கள் அங்கே தங்கியிருந்த திருநங்கைகள். அவர்களுடன் நான் ஆறு மாதம் பயணம் செய்தேன். அவர்களுடைய கதைகள் கேட்டேன்.அந்த அனுபவங்கள் என் எழுத்திலும் பதிவு செய்தேன். நகரம் கொடுத்த காயங்களை அவர்கள் பகிர்ந்தபோது அந்த கடலும் அமைதி அடைந்தது.
இரவு 12,1மணி நேரங்களில் கடலின் முன் நின்று கத்தி அழுதிருக்கிறேன். “எனக்கு யாருமில்லை இந்த மனிதர்கள் ஏன் இப்படி” என்று கடலிடம் சொன்னேன்.கடல் எனக்கு கொடுத்த பதில். அலை வந்து என் கால்களை தொட்டது. நிலாவின் வெளிச்சம் அதை அலங்கரித்தது.” எப்போதும் வரலாம்,உனக்காக நான் இருக்கிறேன் யாரும் இல்லை என்று நினைக்காதே” என்று அந்த கடலும் நிலவும் எனக்கு சொன்னது.மெரினா-என் இரவுகளின் இல்லம். மக்கள் வெளியேறிய பின் அலைகள் மட்டும் பேசும் நேரங்களில் அந்த மணலில் நான் என் தனிமையை பரப்பிக் கொண்டிருந்தேன். அதனால் தான் கடலோடு எனக்கு ஒரு உயிர் பிணைப்பு உருவானது.
சென்னையில் பல இடங்களில் தங்கியிருக்கிறேன். இரவு நேரங்களில் என்னை விரட்டும் அபாயங்களும் இருந்தன. அப்போது என் கையில் இருந்தது வெறும் மிளகாய் பொடி மட்டுமே. அதைவிட பாதுகாப்பானவர்கள் தெரு நாய்கள்.அந்த உயிர்கள் என் நண்பர்களாக இருந்து என்னைக் காப்பாற்றினார்கள்.
இரவு நேரங்களில் எனக்கு அருகில் வந்து வாலை அசைத்து”நீ பயப்பட வேண்டாம்” என்று சொல்லும் தோழர்களாக இருந்தனர்.அவர்களின் கண்களில் மெட்ராஸின் தெருகளும்,கருணையும் தெரிந்தது. அந்த நாய்களின் நம்பிக்கையும் பாசமும் ஒருபோதும் மறக்க முடியாதது.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பைலைட்ஸ் கீழ் நடு இரவுகளில் நான் அமைதியாக உட்கார்ந்திருப்பேன். தெருக்களின் விளக்குகள் நீளமான நிழல்களை வீச, சாலையோரத்தில் ஓடும் வண்டிகளின் சத்தம் மட்டும் அந்த அமைதியை கிழித்துச் செல்லும்.அந்த சத்தங்களிலும் நகரத்தின் இரவுத் துடிப்பை உணர்வேன்..பொதுவாக, நான் பகலில் நகரைச் சுற்றியிருந்தாலும் இரவு நேரங்கள் தான் என்னை சென்னை என்ற சொல்லின் அர்த்தம் அறிய வைத்தன.
அந்த நிசப்தமான இரவுகள் நகரத்தின் உள்ளார்ந்த ரகசியங்களையும், வாழ்க்கையின் கடினமான உண்மைகளையும் எனக்கு கற்றுத்தந்தன.அதனால் தான் சென்னை எனும் நினைவுகள் என் மனதில் ஒரு அழியாத பதிப்பாக தங்கியுள்ளன. அவை இரவின் வெளிச்சத்திலும், இருளின் அமைதியிலும் வாழ்ந்துக் கொண்டே இருக்கின்றன.
சென்னை எனக்குக் கொடுத்தது வெறும் இடங்கள் அல்ல. மனிதர்களின் தடங்கலும். திருமங்கலம் பஸ் நிலையத்தில் நானும் ஒரு முதியவரும் தினமும் சந்திப்போம்.”.நீங்க நேற்று வரல என்ன ஆச்சு?” என்றுக் கேட்டார்.அந்த ஒரு வரி “ஒரு நகரம் ஒரு மனிதனை கவனிக்கிறது” என்பதை உணர்த்தியது.நான் வேலை செய்த காலத்திலும், வேலை இழந்த தருணங்களிலும், சென்னை எனக்கு பாடங்களைக் கொடுத்தது.
அந்தப் பாடங்கள் புத்தகங்களில் கிடைக்காதவை. அவை தெருவோர விளக்கின் கீழ், நிலையப்படிகளில்,கடை மூளைகளில், மனிதர்களின் சிரிப்பிலும் துயரத்திலும் எழுதப்பட்டிருந்தன.

கசப்பான அனுபவங்களும் கிடைத்தது,இனிமையான அனுபவங்களும் கிடைத்தது. “சென்னை” வெறும் கட்டிடங்களின் கூட்டம் அல்ல,அது ஒரு உயிர்.அதன் மார்பில் நான் சாய்ந்தேன். அதன் தோளில் அழுதேன். அதன் கையில் சிரித்தேன்.பல ஆண்டுகளாக சென்னை என்ற நகரில் வேரூன்றிருந்தும், நாளை நமக்ககொரு வெளிச்சம் வந்து சேருமோ என்று நம்பிக்கையைத் தழுவி பலபேர் வாழ்கிறார்கள். அந்த வரிசையில் என் கணவர் குங்குமராஜும் ஒருவர்.
17 ஆண்டுகளாக சென்னையை தன் கலைப்பயணத்தின் தலமாகக் கொண்டு தன்னையே முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.
உழைப்பின் உச்சியில் நின்றும் இன்னும் இதயம் கனிந்த நம்பிக்கையோடு “ஒருநாள் நம் வாழ்க்கை ஆரோக்கியமாக மாறும் (காயத்ரி)பலூன் பாப்பா” என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். அவரின் வாழ்வு போராட்டத்தின் நடுவில் அவருடன் தோள் கொடுத்து நிற்கும் மனைவியாக அவரைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பாக அந்தப் பாதையை இணைந்து கடத்திக் கொண்டிருக்கிறேன்.பொதுவாக சொல்வார்கள் “சென்னை போய் திரும்பி வந்தவள் நாசமாய் போய்விட்டாள்” என்று.
ஆனால், அது எனக்கு பொருந்தாது. என் கதையை,என் பாதையை, என் அனுபவத்தை, நான் மட்டுமே சொல்ல முடியும்.சென்னையில் நான் எவ்வாறு இருந்தேன், எவ்வாறு வாழ்ந்தேன்,என்னைப் போல வேறு யாரும் அறிய முடியாது.எனது கதையை வேறு யாரும் எழுத வேண்டியதில்லை. ஏனெனில், இந்த நகரம் என்னை எவ்வாறு வடித்தது,என்னை எவ்வாறு சோதித்தது அனைத்திற்கும் பதிலாக நானே நிற்கிறேன்.

சென்னையில் நான் இருந்த விதத்தின் தெளிவான பிரதிபலிப்பாக. என்னை கலைஞனாகவும், மனிதனாகவும் வடிவமைத்த சென்னையை நினைக்கும்போது அது ஒரு புவியியல் வரைபடம் அல்ல,அது ஒரு உயிருடன் கூடிய நினைவு காப்பியம். இன்று நான் எங்கிருந்தாலும் சென்னையின் மண்வாசனை, கடலின் சத்தம், தெருவோர விளக்கின் வெளிச்சம்.இவை என் உள்ளத்தில் வாழ்கின்றன புகைப்படமாக இல்லை.அது என் மனதில் ஒரு முடிவில்லாத படம். இந்த நகரம் எனக்கு நன்றி சொல்லும் அளவுக்கு அல்ல,நன்றி கடனில் ஆழ்த்திய நகரம் எப்போதும் என் மனதில் ஒரு சிறப்பான இடம்.அது தான் என் சென்னை. அந்த நம்பிக்கையின் சுவடாக இக்கட்டுரையை அர்ப்பணிக்கிறேன்.ஏனென்றால், இக்கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும். சென்னை மீது நம்பிக்கை வைத்து நிற்கும் எத்தனையோ மனங்களுக்கும் அந்த மாற்றம் தவறாமல் வந்து சேரும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!