Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
உபேந்திரா: `'பாட்ஷா'வை விட 10 மடங்கா?’ - அன்று இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த திரைக்கதை மன்னன்
சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, 90'களில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த கன்னட இயக்குநராக, நடிகராக உச்சத்தில் இருப்பவர் உபேந்திர ராவ்.
பி.காம் வரை நன்றாகப் படித்த உபேந்திர, சினிமா மீதான ஆர்வத்தால் நாடகங்களில் நடித்து, கதை எழுதி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான காசிநாத்தின் உதவியாளராக பணியாற்றியதுதான் அவருக்கு சினிமா கதவுகளை திறக்க வைத்தது. காசிநாத்திடம் பணியாற்றிக் கொண்டே சினிமாவைக் கற்றுக்கொண்டவர் கன்னட திரையுலகில் 1992-ம் ஆண்டு 'Tharle Nan Maga' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பணம் பற்றி யாசகர் ஒருவர் பேசுவதிலிருந்து ஆரம்பித்து ஏழையாக இருக்கும் கதாநாயகன், பணக்காரப் பெண்னை காதல் பண்ணி கல்யாணம் பண்ணுவதை காமெடியோடு சேர்த்து கருத்தையும் சொல்லி கவர்ந்த படம் அது. உபேந்திராவின் ஸ்டைலே நல்ல திரைக்கதை, கதையோடு கருத்தையும் நுட்பமாகச் சேர்த்து, சலிப்பில்லாமல் சொல்வதுதான். நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே வாங்கிவிட்டார்.
'பாட்ஷா' படத்தை விட 10 மடங்கா..?
1995-ம் ஆண்டு 'Om' என்ற கேங்ஸ்டர் படத்தை எடுத்தார். ரஜினி 'கூலி' இசை வெளியிட்டுவிழாவில் 'பாட்ஷா' படத்தை விட 10 மடங்கு இருக்கும்' எனப் புகழ்ந்திருப்பார். அடாவடித்தனமான கேங்ஸ்டராக இருக்கும் நடிகர் சிவராஜ்குமார், பயபக்தியோடு ஒரு அம்பியாக இருந்து, அடி வாங்கி, மிதிவாங்கி அதிலிருந்து தப்பிக்க வழியில்லாமல், ஏரியாவில் பெரிய கேங்ஸ்டாரக மாறுகிறார்.

பெண்ணால் அவரது வாழ்க்கை மொத்தமாக உடைந்து மாறிவிடுகிறது. கடைசியில் அமைதியாக சாதாரண வாழ்கைக்குத் திரும்பி, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதாகப் படம் நிறைவடையும். அதுதான் கதை. சிம்பிளான கேங்ஸ்டர் கதைதான். ஆனால், அதை முன்னும் பின்னுமாக 'non linear' திரைக்கதையில் அமைத்து முதல் காட்சியைப் பார்த்தால் முழுப்படத்தையும் பார்க்கத் தோன்றும் அளவிற்கு சிறப்பாக திரைக்கதை அமைத்திருப்பார்.
இப்படத்தின் மூலம் இந்திய அளவில் பாராட்டுக்களையும், சிறந்த இயக்குநர் என்ற பெயரை வாங்கினார் உபேந்திரா. ஹாலிவுட்டில் 'தி காட் ஃபாதர்', கோலிவுட்டில் 'பாட்ஷா', 'நாயகன்' போல அப்போது கன்னட சினிமாவிலிருந்து வந்து அசத்திய கேங்ஸடர் திரைப்படம் உபேந்திராவின் 'Om'. கன்னட சினிமாவின் ‘கல்ட் கிளாசிக்’ என இன்றும் கொண்டாடுகிறார்கள்.
இயக்குநர் டு கதாநாயகன்
1998-ஆம் ஆண்டு 'A' படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார். காதல் கதையோடு, சைக்கலாஜிக்கல் திரில்லரைச் சேர்த்து கணிக்கமுடியாத அடுத்தடுத்த காட்சி அமைப்பால் முன்னும் பின்னுமான தலைகிழான திரைக்கதைச் சொல்லலில் (reverse screenplay) படத்தை மெருகேற்றி அவரது திறமையான இயக்கத்தை காட்டியது. வசூல் ரீதியாகவும் இந்தியாவெங்கும் பேசுபொருளான படமாக மாறியது. இயக்கத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் தனது திறமை உச்சத்தில் இருப்பதை காட்டினார். அவரது இயக்கத்திற்கும், நடிப்பிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
மோஸ்ட் இன்ஸ்பிரஷன் இயக்குநர்
தொடர் வெற்றிகளால் கன்னடம், தெலுங்கு, இந்தி என இந்தியாவெங்கும் உபேந்திராவின் பெயர் கொடி கட்டிப் பறந்தது. அப்போதை உச்ச நட்சத்திரங்கள் உபேந்திராவின் இயக்கத்தில் நடிக்க போட்டிப் போட்டு கதை கேட்டனர். அப்போதைய இளம்தலைமுறை இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரஷன் இயக்குநராக இருந்தார்.

இதையடுத்து 'Upendra', 'Preethse', 'Raktha Kanneeru', Nagarahavu, Anatharu, Budhivanta, மற்றும் Super , Shrimathi , 'Kalpana';, 'Uppi 2' என பல படங்களை இயக்கி, நடித்து சிறந்த நடிப்பிற்காகவும், இயக்கத்திற்காவும் பல விருதுகளைக் குவித்திருக்கிறார். கன்னட சினிமாவின் முடிசூடா இளவரசராக வலம் வந்தவர்.
அரசியல் பயணம்
2017ம் ஆண்டு 'Uttama Prajaakeeya Party' ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ரசிகர் மன்றத்தின் செல்வாக்கை வைத்து அரசியலில் கால் பதிக்கத் திட்டமிட்டார். ஆனால், இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டிபோடவில்லை. சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

'கூலி'யில் உபேந்திரா
கன்னட திரையுலகில் இயக்கம், நடிப்பு என சகலகலா வல்லவனாகத் திகழ்ந்து, இந்தியா முழுவதும் புகழ்பெற்ற உபேந்திரா, இப்போது ரஜினி 'கூலி' படத்தில் நடித்திருக்கிறார். அன்றே திரைக்கதையில் மாஸ்டராக இருந்த உபேந்திரா, லோகேஷ் கனகராஜைப் பார்த்து இசை வெளியிட்டுவிழாவில், 'திரைக்கதையில் நீங்கள் ஒரு மாஸ்டர்' என்று புகழ்ந்தார் தன்னடக்கத்துடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...