மூவேந்தரை மூழ்கடித்த வேளிர்குல வேந்தன்! - ஒரு தேசத்தின் பெருங்கனவு | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
‘முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி வள்ளல் ‘எனும் ஒற்றை வரியில் பாரியை பற்றி பள்ளிக் காலங்களில் படித்த அனுபவம் பின்னர் பறம்பு முழுக்க பறந்து விரிந்த வீரத்தின் அடையாளமாக, அறத்தின் நாயகனாக வீரயுக நாயகன் வேள் பாரியாக விழிகளில் விழுந்து நிறைகிறார்.
தனது காவல் கோட்டம் மூலம் தமது எழுத்துகளுக்கு ‘ சாகித்திய அகாடமி’ மகுடம் சூட்டிக் கொண்ட சு. வெங்கடேசனின் எழுத்தாணிக்குள் பரம்பின் பூண்டு பானம் நிறைந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது அவரது எழுத்துகளுக்குள் விரிந்து நிறைக்கும் அவரது வரிகள் அவற்றை நமது விழிகள் உண்டு சோம பயணத்தை களித்த உணர்வுகளை நெஞ்சகத்துள் கடத்துகிறது.
சிலவிடங்களில் புனைவென்பதை மறந்து நெஞ்சம் கற்பனைத் திரை கடந்து நாவலுக்குள் விரிந்து கடக்கிறது. வார்த்தைகச் சுனைகள் பறம்பின் மலையேறும் கபிலரிடம் நீலனின் உரையாடல்கள் வழியே வழிந்து பரம்பு முழுக்க பெருக்கெடுத்து ஓடும்படி எழுத்தாறுகளை வெட்டி வளம் சேர்த்திருக்கிறார். சு. வெ.

பல்வேறு காவியங்களிலும் இதிகாசங்களிலும் பலபோர்கள் நடைபெற்றுள்ளது, அவைகள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றுள்ளது. அதுபோல இந்த நாவலிலும் சொல்லப்படும் ஒரு காரணம் தேவ வாக்கு விலங்கு என சொல்லப்படும் தேவாங்கிற்கானது செல்லும் வடக்கு திசையை காட்டும் என்ற பண்பைத் தவிர வேறெந்த சிறப்பு பயனுமற்ற தேவாங்கிற்காக ஒரு பெரும் பிரௌயத்தையே மூவேந்தர்கள் தோற்றுவித்தார்கள் என்பது இதர மன்னர்கள் ஆநிரைக் கவர்தலெனும் வெட்சித் திணையின் மற்றொரு அங்கமாகவே இங்கு கருதப்படுதல் வேண்டும்.
நாக்கறுத்தான் புற்களின் மீது விழுந்த பூண்டுபோன்ற சோமபான பழச்சாற்றினை உண்ணுகின்றபோது அப்புற்களின் முனை கீறி தமது நாக்கை அறுத்துக் கொண்டு இரட்டை நாக்குடன் உலவும் பாம்புகளைப்போல் இந்த நாவலை மேயும் நமது நாவுகளும் இரண்டாய் பிளந்து ஒரு நாவு சுழன்று வாசிக்க மறு நாவோ! பிளந்து வார்த்தைகளை வியக்கிறது.
தன்னால் தன் இனத்தின் மீது கற்பிக்கப்பட்ட அபாண்டத்தை துடைக்க தன் வயிரறை கிழித்து தன்மீது திணிக்கப்பட்ட இழிவுநீக்கி உயிர் துறந்த கடுவன் மனதைப் பிழிந்தான், அதுபோல் பறம்பை மீட்க தன் இன்னுயிர் துறந்த தேக்கன், இவர்களின் உயிர் நீத்தலின் நீட்சியாக தன் நிலத்து வீரர்களின் அறப்பிறழ்வைக் கண்டு உயிர் துறந்த திசைவேழர், மற்றும் பொற்சுவைக்கு தாமே முன்னின்று இறுதி மரியாதை புரிந்து போரின் அறம் காத்து நிற்கிறான் பாரி.

ஒரே கவ்வுதலில் கழுத்தை முறித்துச் செல்லும் காக்கா விரிச்சியும், அவற்றின் முட்டைகளையுண்டு இனவிருத்தி தடுத்து அங்கு வாழும் மக்களைக் காக்கும் செங்காவி ஓநாய்களும், ஆள்களின் மீதமர்ந்து சிந்தையிழந்து வீற்றிருக்கச் செய்யும் வண்டு, விருந்தை வளமாக்கும் அறுபதாங்கோழி போன்ற நாவலுக்குள் உலவும் பல்லுயிரிகளின் பண்பு விளக்கம் விழிகளை விரிக்கிறது.
குலங்கள் கடந்து வள்ளியின் மீதான முருகனின் மையலில் குளத்தில் பூத்திட்ட முல்லையின் மணம் வாசிக்கும் நமது நாசியையும் துளைக்கிறது, இவர்களுக்கு உதவும் நண்பன் எவ்வி உருவாக்கிய வேளிர் குலத்தின் நாற்பத்தெட்டாவது தலைவனே பறம்பின் பெருந்தலைவனான பாரி என்பது முன்கதையாக நகர்கிறது.
கபிலரின் குறைமலையறிவை அறிந்துக் கொண்டு பறம்பின் பெருமையறிந்த பழையன், பழம் உண்ணக் கற்றுக் கொடுக்குமிடமும், நாவல் பழங்களின் வகைகளையும் அதன் சுவைகளையும் விளக்குமிடம் விழிகளுக்கும் பழம் உண்ணக் கற்றுக் கொடுக்கிறது.
இந்த நாவலுக்குள் உலவுகின்ற மனிதர்களின் பெயர்கள் வாசிக்கும் நெஞ்சங்களுக்குள் வசீகரிக்கின்றன. நீலன், பழையன், பொற்சுவை, தேக்கன், அலவன், கொற்றன் , கடுவன், இரவாதன் , அகுதை போன்ற பெயர்கள் தமிழ் சூட்டலின் நீட்சியாக விகடன் விழாவில் இந்த நாவலிலுள்ள பெயர்களைச் சூடிக் கொண்ட பிள்ளைகளை மேடையேற்றி சிறப்பித்தது தமிழ்ப் பெயர்களை சூடிக்கொள்ளலை மேலும் வளப்படுத்தும் சிறப்பான செய்கையாகும்.

தீராத களைப்பைச் சுமத்து தன்னை காண வந்திருக்கும் கபிலரின் பேரறிவை மெச்சும் வண்ணம் களைத்த அவரது கால்களுக்கு ஓய்வளித்து தமது பரந்த தோள்களில் அவரது தேகம் சுமக்கும் பாரி பின்னர் கொற்றவை கூத்து விருந்தில் தன்னருகே உலவும் இரையைக் கூட மறந்து அறுபதாங்கோழியின் அறுசுவை இறைச்சியின் சுவையறிந்து அதனை உண்ண விழியை கூர்மையாக்கி பதுங்கி காத்து கிடக்கும் புலியைப் போன்று தமது பெருமதிப்பிற்குறிய விருந்தாளியாய் வந்திருக்கும் கபிலருக்கு அந்த அருபதாங்கோழியை விருந்தாய் படைத்து உபசரிக்க காத்திருக்கும் பாரி அறிவுக்கு மதிப்பளிக்கும் தலைவனாய் தன்னிகரற்று நிற்கிறான்.
போர்க்களத்தில் மூச்சிறைக்கச் சீறிப்பாயும் குதிரைப்படையுடன் மூவேந்தர் படைகளை கிழித்துக் கொண்டு மூஞ்சல் நோக்கிப் பாயும் இரவாதனின் வீரமும், போரின் அறம் காத்து முரசறைந்தவுடன் ஆயுதங்களை கீழிறக்கி போரின் நெறிகாத்து பின்னர் மாண்ட அவனது ஒப்பற்ற அறமும், தன் மகன் தனித்து போர்முனைக்குள் புகுந்திட அவனுக்குத் தூணாய் துணை புரிய மனம் தவித்தாலும் தனக்கு வழங்கப்பட்ட தேர்ப்படை பொறுப்பை காத்து நின்று கடமை காத்த அவன் தந்தை முடியனின் தர்மமும் வாசிக்கும் நெஞ்சங்களை நெகிழவே செய்திடும்.
சமுத்திரமாய் வியாபித்து நிற்கும் மூவேந்தர் பெரும்படை கண்டு துஞ்சாது துணிந்து தமது போர் அறிவைக் கொண்டு புயலென முடிவெடுத்து தொடுத்த சுருள் அம்பு தாக்குதலும், மலைமுகட்டில் குதிரைப்படையை சிதறடித்து ஓடச் செய்த வீரமும், எதிரியின் யானைப்படையை ஆறுவாய் சங்கு அட்டைகளைக் கொண்டு திசைதிருப்பி எதிரிப்படையையே புற்றீசல் போல சிதறடித்த பாரியின் விவேகமும் போர் முனைக்குள் பாரியின் பேரறிவையும் பெறுவீரத்தையும் விழிகளுக்கு உரைத்துச் செல்கிறது.
வாழ்நாளின் ஒருமுறையேனும் மானிடர் கடலைக் கண்டிடவேண்டும் எனும் கபிலரின் கூற்றுக்கு “பாரியின் கருணையை விடவா கடல் பெரிது” எனும் நீலனின் பதிலிலேயே வேள்பாரியின் வெண்கொற்றக் குடை விரிந்து நிற்கிறது.

இப்படியாக மலைக் காடையின் கூட்டுக்குள் போடப்பட்ட நாகர வண்டின் மணம்கண்டு வண்டினங்கள் வலிய வந்து மலைக் காடைக்கு இரையாவதைப்போல் புத்தகத்தினுள் மேயும் நமது கண்கள் பக்கத்தை புரட்டுவதில் மனம்வந்து புத்தகத்துள் நுழைகிறது.
இந்த பனுவலை இயக்குனர் சங்கர் படமாக்குவதற்கு முன் அனைவரும் படித்துவிட வேண்டும் அப்போதுதான் இதில் உலவும் நம்மைக் கவர்ந்த பாத்திரங்களுக்குள் நம்மைப் பொருத்திக் கொண்டு நாமும் பரம்பின் பெருவெளிக்குள் பாரியின் உருவாய் உலவ முடியும், இல்லையெனில் வேறெதேனும் ஒரு நடிகர் அந்தப் பாத்திரத்திற்குள் புகுந்துகொண்டு நம்மை முந்திக் கொள்வார் பின்னர் அவர்முகமே அந்தப் பாத்திரத்திற்குள் பொருந்திக் கொள்ளும் இதற்கு உபயமே பொன்னியின் செல்வன், கர்ணன், கட்டபொம்மன் போன்றவை.
எப்படியிருப்பினும் சு.வெ’வின் பேனா முனை பச்சையம் நிறைய நிரப்பி முல்லைக்குத் தேர் தந்த பாரியின் கருணையைப் போல நமது விழிகளுக்கு பரம்பின் பசுமையை போர்த்திச் செல்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ஓவியர் மணியம் செல்வனின் வரைகலை நாவலுக்கு வரைந்து கொடுத்து நாவலை வளப்படுத்திக் கொடுக்கிறது, அவர் பாரியின் பலத்தினை வளப்படுத்திய சு. வெ’வின் எழுத்துச் சுழலில் அவர் மனமும் சிக்குண்டு பாரிக்கு சு.வெ’வின் முகம் போர்த்தி வரைந்தது போலுள்ளது மேலுள்ள படங்களின் ஒற்றுமை.
அறமே! எமமண்ணை ஆளட்டும் எனும் பாரியின் வேட்கை! இந்நாவலுக்கு அணிகலன் பூட்டி அழகு செய்திருக்கிறது.
எண்ணமும் எழுத்தும் ..
பாகை இறையடியான்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!