குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்
பழங்குடியின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கொல்லிமலை எஸ்எஸ்ஐ கைது!
நாமக்கல்: கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின கல்லூரி மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லிமலை சிறப்பு உதவி ஆய்வாளரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார் (55). இவர் கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
அந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு உணவு சமைத்து தரும் சமையலரின் 19 வயதுடைய மகள், திண்டுக்கல் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 ஆம் தேதி பணி நிமித்தமாக, கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்குமார் காரில் புறப்பட்டார். அப்போது கல்லூரிக்கு புறப்பட்ட சமையலரின் மகளை, ராசிபுரத்தில் அழைத்து சென்று விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவியும், அவரது தந்தையுமான சமையலரும் காரில் ஏறி வந்தனர். கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சி பகுதியில் சமையலர் இறங்கிவிட, மாணவி மட்டும் சிறப்பு உதவி ஆய்வாளருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவியை உதவி ஆய்வாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மேலும், வெளியில் சொன்னால் அவ்வளவுதான் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
மகளிர் காவல்துறையினரின் விசாரணையில் மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். விமலா உத்தரவின்பேரில், ஆய்வாளர் வேதப்பிறவி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மோகன்குமாரை கைது செய்தார்.