"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!
டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!
நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி மற்றும் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், குஜராத் மாநிலம் சூரத், வைர நகரமாக மின்னிக் கொண்டிருந்த நிலையில், புதிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் எதுவும் வராமல் பொலிவிழந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வந்த வைர ஏற்றுமதி ஆர்டர்களும், டிரம்பின் அறிவிப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வை தொழிற்சாலைகள் தெரிவித்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னமும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், ஆண்டின் மொத்த வைர ஏற்றுமதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்த வைரத்தில் 68 சதவீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையே மதிப்பில் எடுத்துக் கொண்டால் 42 சதவீதம். அடுத்த இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. இங்கிருந்து 28 சதவீத மதிப்பு கொண்ட வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு வெறும் 19 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பதால், இந்த நாட்டுடன் இந்திய வைர நிறுவனங்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கு வரும் வைர ஆர்டர்கள் கால் பங்குக்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் அதனால், உற்பத்தி 30 முதல் 35 சதவீதம் குறைந்துவிட்டாகவும் புதிய வரி விதிப்பினால், வைர ஏற்றுமதி நிறுவனங்களே சரிந்துவிடும் என்றும் வைர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை காத்திருக்கப் போவதாகவும், தங்களிடம் வைரத்தை வாங்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் பேசி, அவர்கள் வரி விதிப்பில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படும். அவர்கள் ஒப்புக்கொண்டால் ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். இந்த கடினமான காலத்தில்தான், வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான உறவுக்கு பலப்பரீட்சை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.