காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!
சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பான சில நாள்களில் கூடுதல் நாள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த தொடருக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாக நடிக்கிறார். தலைப்புக்கு ஏற்ப இத்தொடரில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் லப்பர் பந்து படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்த மெளனிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா இத்தொடரை தயாரிக்கிறது. இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையிலான தலைப்பில் இரு காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தொடர், ஒளிபரப்பான சில நாள்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால், சனிக்கிழமையும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இதையும் படிக்க | சோனியா அகர்வால் வருகை.... விறுவிறுப்படையும் கயல் தொடர்!