அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கெளடாவை சமூக வலைதளத்தில் சீண்டியதாக, தனது ரசிகர் ரேணுகா சாமியைக் (33) கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் பவித்ரா கெளடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், இதுவரை 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா, மகேந்திரன் அமர்வு, எந்த மட்டத்திலும் நீதி வழங்கும் அமைப்பு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரியவர் என்றாலும் சட்டத்தை விட அவர் பெரியவர் இல்லை. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் பிறப்பித்திருப்பது விபரீதமானது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமானது என்று காட்டமாகக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
ஏற்கனவே, சிறையில் நாற்காலியில் சிகரெட் மற்றும் தேநீர் கோப்பையுடன் தர்ஷன் அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவருடன் ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகள் வெளியான போது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மீண்டும், சிறையில் இருந்தவாறு நடிகர் தர்ஷன் விடியோ அழைப்பில் பேசும் விடியோ வெளியாகியிருந்தது. 25 விநாடிகள் கொண்ட அந்த விடியோவில் தர்ஷன் தனக்கு வேண்டியவருடன் விடியோ அழைப்பில் நலம் விசாரிக்கிறார். பதிலுக்கு மறுமுனையில் இருப்பவரும் தர்ஷனின் உடல்நிலை, வசதிகள் குறித்து கேட்டறியும் வகையில் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தர்ஷனின் ஜாமீனை இன்று ரத்து செய்திருக்கிறது.