தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து - தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம...
``இறந்தவர்களுடன் தேநீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி'' - ராகுல் காந்தி
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அந்த பணியின் போது, சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர்களை அகற்றியதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி தெரிவித்து, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
முன்னதாக, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் "இறந்தவர்கள்" என்று கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வித்தியாசமான அனுபவம் இதுவரை கிடைத்ததில்லை. இந்தப் புதுமையான வாய்ப்பை வழங்கியதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.