அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
``வாக்குறுதி தந்தவர் தியேட்டரில்; மக்கள் நடுரோட்டில்'' - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு ADMK கண்டனம்
தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாள்களாக, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமைதியான முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், போராட்டக்குழு தாக்கல் செய்த மனுவில் அரசுக்கு உடனடித் தீர்வை பரிந்துரைக்காத சென்னை உயர் நீதி மன்றம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரித்து, போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுமாறும், கலையாத பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்யுமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனாலும், தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை நான்கு மணியளவில் அமைச்சர்கள் கே.என்.நேருவும், சேகர் பாபுவும் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களைக் கைதுசெய்ய ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மேலும், போக்குரவத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் காலி பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
20 நிமிடம் கூட நீடிக்காத அமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, தூய்மைப் பணியாளர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
பின்னர், இரவு 10 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.
அடுத்த ஒருமணிநேரத்தில் போலீஸார், தூய்மைப் பணியாளர்களைத் தாக்கியும், குறிப்பாகப் பெண்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றினர்.

"எங்க வயித்துல அடிக்கிறீங்களே. தமிழ்நாட்டுல பொறந்த எங்களுக்கு வேலை இல்லையா? ஆந்திராகாரனுக்கு வேலை தர்றதுக்கு எதுக்கு எங்ககிட்ட ஓட்டு வாங்குன? ஆட்சி செய்ய முடியலைனா ராஜினாமா பண்ணிட்டு போங்க. இந்த ஆட்சி ஒழிக" என ஆதங்கத்துடன் பெண் தூய்மைப் பணியாளர்கள் முழங்கினார்.
சுமார் அரைமணிநேரத்தில் மொத்த போராட்டக்காரர்களையும் போலீஸார் கைதுசெய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.

அதேவேளையில், நேற்று முன்தினம் பாரிஸில் ``நானும் கம்யூனிஸ்ட்தான்'' என்று பெருமையுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்ட அதேநேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் `கூலி' படத்தைப் பார்த்து வாழ்த்தியிருந்தார்.
பின்னர், போராட்டம் நடந்த இடத்தில் இருந்த குப்பைகள் தூய்மைப் பணியாளர்களை வைத்தே அகற்றப்பட்டது.
வாக்குறுதி கொடுத்தவரோ தியேட்டரில், வாக்குறுதியை நிறைவேற்ற கூறிய மக்களோ நடுரோட்டில்.
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) August 14, 2025
ஜனநாயக நாட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி போராடிய தூய்மை பணியாளர்களை காவல்துறை மூலம் அடித்து அகற்றிய சர்வாதிகாரி ஸ்டாலினின் ஆட்சி அகற்றப்படும் நாள் விரைவில்.#ByeByeStalin… pic.twitter.com/pqqde4c0a7
இந்த நிலையில், தி.மு.க அரசின் இத்தகைய அராஜக செயலைக் கண்டித்திருக்கும் அ.தி.மு.க, "வாக்குறுதி கொடுத்தவரோ தியேட்டரில், வாக்குறுதியை நிறைவேற்ற கூறிய மக்களோ நடுரோட்டில்.
ஜனநாயக நாட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடிய தூய்மை பணியாளர்களை காவல்துறை மூலம் அடித்து அகற்றிய சர்வாதிகாரி ஸ்டாலினின் ஆட்சி அகற்றப்படும் நாள் விரைவில்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.