சித்தர்காடு: அரிசி ஆலையால் இன்னல்படும் மக்கள்; காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு - என்ன நடக்கிறது?!
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலை 1972 ல் தொடங்கபட்டது. இம்மாவட்டம் டெல்டா சார்ந்த பகுதி என்பதால் அரிசி ஆலை அவ்விடத்தில் அமைவு பெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விளைவிக்கப்படும் நெல்களை அரிசியாக மாற்றி வரும் பணியை இந்த ஆலை செய்து வருகிறது. மக்கள் குடியிருப்புப் பகுதி ஒட்டி அமைந்தக் காரணத்தால் அப்பகுதி மக்களும் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். காலப்போக்கில் ஆதாயத்தை மையப்படுத்தி ஆலை இயங்க ஆரம்பித்தது எனவும் இதனால் ஆலைக்கான விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த விவரத்தை அறிய அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடினோம். ``எங்க ஊர்ல அரிசி ஆலை வந்ததால எங்க மூதாதைய அம்மா சந்தோஷம் அடைஞ்சாங்க. ஊரை விட்டு வெளியே போகாம குழந்தை குட்டிகளை கண்ணிலேயே பார்த்துக்கிட்டு வாழலாம்னு சந்தோஷத்திலேயே நெதமும் ஆலைய வாழ வைக்கிற சாமியா கையெடுத்து கும்பிட்டு தான் வேலை வெட்டிக்குப் போவாங்க. மனுஷ மக்க வளர்வது போலையே ஆலையும் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சிடுச்சி. இன்னும் சொல்லப்போனால் எங்களோட வருமானமும் பெருக ஆரம்பிச்சுடுச்சி.

கையில காசு பணம் பாக்க ஆரம்பிச்ச எங்க சனம் ஆலையோட ஆதாயத்தை கவனிக்கிற அளவுக்கு அறிவு இல்லாததுங்களா இருந்துச்சிங்க, கொஞ்சம் வருஷம் கழிச்சு ஆலையில வேலை பாக்குற ஒவ்வொருத்தவங்களுக்கும் மூச்சு திணறல் நெஞ்சு வலி அப்படி இப்படின்னு வியாதி வாய்ப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாரமும், மாசமும்மாப் போயிட்டு வந்துச்சுங்க. ஊர்ல படிச்ச சில விடலை பிள்ளைங்க தான் ஆலையோட அட்டகாசங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா எங்க கிட்டப் பேச ஆரம்மிச்சுட்டுங்க. எங்க தலைமுறையை காக்க வேண்டி இன்னைக்கு நாங்க போராடிகிட்டு இருக்கோம். இன்னும் சொல்லப்போனா எங்க பேரன் குட்டிங்களோட மூச்சு காப்பாத்த நாங்க உயிர விடவே தயாரா இருக்கோம்" என்று கலங்கிய கண்களோடு அப்பகுதி மக்கள் பேசினார்கள்.
தொடர்ந்து அவ்வூரைச் சேர்ந்த வசந்த் என்பவரை சந்தித்துப் பேசினோம். "நெபுளைசர் ஸ்பிரே இல்லாம எங்களால ஒரு நிமிசம் கூட இருக்க முடியல, இங்க இருக்குற பலருக்குமே ஆஸ்துமா, சுவாச பிரச்னை மூச்சுத்திணறல், இதயம், நுரையீரல் சார்ந்த நோயிலா இருக்கு. எப்ப மூச்சுத்திணறல் வரும் எப்ப நெபுளைசர் யூஸ் பண்ணனும் அப்புடின்ற கன்டிசன்ல இருக்கோம். பல பேர் இதனால இறந்துப் போயிட்டாங்க." என்றார் குமுறலாக.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நவீன அரிசி ஆலையானது 1972இல் வீட்டில் ஒருவருக்கு வேலை என்ற ஒப்பந்தத்தின்படி நிலங்கள் எழுதி வாங்கப்பட்டு குடியிருப்புப் பகுதியிலே அமைக்கப்பட்டது. அரிசி ஆலையிலிருந்து வரும் புகையில் உள்ள நச்சு வாயுக்களால் ஆரம்பக் காலத்தில் இருந்தே நுரையீரல், இதயம் சார்ந்த நோய்களும் ஒருசில இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதற்கு முடிவுகட்ட எண்ணி அப்பகுதி மக்கள் கிராம நலச்சங்கம் உருவாக்கி, கடந்த 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உயர் நீதிமன்றமானது இயற்கைவாயுவினை மாற்றித் தருவதாகவும், சுற்றுபுற காற்றின் தர ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. சுற்றுபுற காற்றானது தர ஆய்வு செய்யபட்டு முடிவு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2010-ல் உயர் நீதிமன்றம் அரிசி ஆலைக்கு இயங்கும் தகுதி இல்லை, உடனடியாக மூட வேண்டும், இந்த வழக்கமானது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கீழ் வருவதால் இதற்கானத் தீர்வினை இரண்டு வாரண்களுக்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று ஆலையானது 2010 முதல் 2017 வரை மூடப்பட்டிருந்தது. 2017க்கு பிறகு பச்சை அரிசி நெல்லை அரைத்தால் புகை வராது என அரைக்க ஆரம்பித்தனர். ஊர்மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வரவில்லை என்றதும் புழுங்கல் நெல்லையும் அரைத்த செய்தி அறிந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

2022இல் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஊர்ப் பொதுமக்கள் சென்று அரிசி ஆலையை பார்வையிட்டனர்.அரிசி ஆலையானது நூறு லாரி உமியுடன் கரி மற்றும் சாம்பலால் நிறைந்து சுடுக்காட்டை விட மோசமான நிலையில் இருந்தது. இதனால் சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டத்தினை நடத்தினர். அப்போது அரசு கண்துடைப்பு நாடகத்திற்காக அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து மக்களோடு பேசி ஆலையை மேம்படுத்தித் தருகிறோம் என்று கூறியது. 31.07.2024 மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்காலிகமாக ஆலையை நிறுத்தவும் காற்றுத் தர ஆய்வு செய்யப்பட்டு நிரந்தரமாக மூட முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு ஆலை நிர்வாகம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
காற்றின் தரம் ஆய்வு செய்ய அரிசி ஆலைக்கு மூன்று வகையான சோதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும். அரிசி ஆலை இயங்கா நிலையிலும் மூலதன நிலையிலும் இரண்டு சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. புதுப்பிக்கபட்ட நிலையில் எடுக்கும் மூன்றாவது சோதனையானது மிக முக்கியமானது. காற்றின் தரத்தினை சோதிக்கும் இச்சோதனையானது நிகழ்த்தபடவே இல்லை... ஒப்பந்தத்தை மீறி அரிசி ஆலை நிர்வாகத்தால் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இது குறித்து ஜனவரி 2025யில் தாசில்தார் மற்றும் வருவாய்க் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீட்டு கடிதங்கள் அனுப்பபட்டன. அவர்களிடம் இருந்து எந்தவொரு பதில்களும் வரவில்லை, 24.07.2025 சுடுகாட்டில் குடியேறும் போராட்டமானது மீண்டும் தொடர்கிறது... இப்போது தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இனி அரிசி ஆலையை இயக்க மாட்டோம் என நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இரண்டு நாட்களுக்கு பின் அரிசி ஆலையானது மீண்டும் இயங்கப்படுகிறது.
மாசுக்கட்டுபாட்டு வாரியமானது புகைப்போக்கியின் அளவை உயர்த்துகிறோம் இந்த இயந்திரத்தை மாற்றி தருகிறோம் அந்த இயந்திரத்தை மாற்றுகிறோம் எனக் கூறி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சற்றும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாகவே செயல்பட்டுவருகிறது.

இது குறித்து மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் நலீனாவிடம் பேசியபோது, "புகைப்போக்கியின் அளவை உயர்த்துவது மற்றும் கொதிலனுக்கு மாற்றாக இயற்கைவாயுவிற்கு மாற்ற அதானி குழுமம் பார்வையிட்டுள்ளது. 2010-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தற்போது ஒன்றொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
சுமார் 15 ஆண்டுக்காலமாக ஆமை வேகத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அவர் பேச்சிலேயே தெரிந்தது!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக அரிசி ஆலையை மூடக் கோரியும், காற்று தர ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டு விரைவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
பொதுமக்களின் கோரிக்கையானது அரிசி ஆலையை மூட வேண்டும். மருத்துவக் குழு ஆய்வுசெய்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்... உயர் திமன்றத் தீர்ப்பையும் அமைதிப் பேச்சுவார்த்தையையும் அவமதித்த ஆலை நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரிசி ஆலை அத்தியாவசிய தேவையின் ஆக்கம் என்றாலும் ஊர்மக்களுக்கு உடல் ரீதியான பல முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், அரிசி ஆலை இயங்கும் நிலையில் இருந்தால் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கலாம். ஆனால் இந்த ஆலையானது இயங்க தகுதி அற்ற நிலையில் இருக்கிறது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த ஆலையை மூடுவதே சிறந்த தீர்வாகும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர் ஊர்மக்கள்.