அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் ...
ஒரே நாளில் விசாரணைக்கு வரும் 2 வழக்குகள்; முக்கிய கட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டம் சார்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வருகிறது. அதனால் போராட்டக்குழுவைப் பொறுத்தவரைக்கும் இன்றைய தினம் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது.

போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தரின் அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டுமென அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கேட்டுக்கொண்டார்.
வாதங்களை எடுத்து வைக்கும் போது, "சங்கம்தான் அரசை ப்ளாக்மெயில் செய்கிறது" என்றும் பி.எஸ்.ராமன் வாதிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்றைக்கு 46 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.
அதேமாதிரி, வினோத் என்பவர் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கும் தலைமை நீதிபதியின் அமர்வுக்கு முன் இன்றைக்கு விசாரணைக்கு வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் சுதந்திர தினம் வரவிருக்கும் நிலையில், அதற்குள் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்றே இருதரப்பும் முனைகிறது. அதனால்தான் இன்றைய நாளில் விசாரணைக்கு வரும் இந்த இரண்டு வழக்குகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.