Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி
தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா?" எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.
மேலும், "டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும்.
பிடிக்கப்படும் தெருநாய்கள் முடிந்த வரை பொதுமக்கள் அதிகம் இல்லாத இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
அனைத்து நாய்களும், பாதுகாப்பான இடங்களில் முழுமையான சிசிடிவி காட்சிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்" என்று கூறி டெல்லி அரசுக்கு 8 வாரங்கள் காலக்கெடு விதித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுக்கு எதிர்வினையாற்றிய பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு, நாய்களை இடம்பெயர்த்து சிறையில் அடைப்பது அறிவியல் பூர்வமானது அல்ல என்றும், இது மிகப்பெரிய அளவில் நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிக்கை வெளியிட்டது.
அதோடு, டெல்லியில் இவ்வளவு நாய்கள் திரிவதற்கு டெல்லி அரசு முறையாக கருத்தடை திட்டத்தை செயல்படுத்தாததே கரணம் என்றும் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலரும், பா.ஜ.க முன்னாள் எம்.பி-யுமான மேனகா காந்தி, "இது கோபத்தில் ஒருவர் வழங்கிய மிகவும் விசித்திரமான தீர்ப்பு. கோபத்தில் வரும் தீர்ப்புகள் விவேகமானவை அல்ல.
டெல்லியில் அரசு நடத்தும் காப்பகம் ஒன்றுகூட இல்லை. அப்படியிருக்கும்போது எத்தனை லட்சம் நாய்களை காப்பகங்களில் வைப்பீர்கள்?
காப்பகங்கள் அமைப்பதற்கு ரூ. 15,000 கோடி ஆகும். டெல்லி அரசிடம் 15,000 கோடி இருக்கிறதா?
யாரும் வசிக்காத 3,000 இடங்கள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வளவு இடங்களை எப்படி நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்? இவையனைத்தையும் 2 மாதங்களில் செய்ய முடியாது.

மேலும், தூய்மைப் பணியாளர்களாக ஒன்றரை லட்சம் பேரை வேலைக்கு நியமிக்க வேண்டும். இதற்கு மீண்டும் கோடிக்கணக்கில் செலவாகும்.
எல்லாவற்றுக்கும் மேல், இங்கிருந்து நாய்கள் இடம்பெயரும்போது, அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து நாய்கள் டெல்லிக்கு வரும். ஏனெனில், இங்கு அதிக உணவு கிடைக்கும். பின்னர், ஒரே வாரத்தில் டெல்லியில் மேலும் 3 லட்சம் நாய்கள் இருக்கும்.
பிறகு நீங்கள் மீண்டும் ஒரு கருத்தடை திட்டத்தைத் தொடங்கி நூற்றுக்கணக்கான கோடிகளை மீண்டும் செலவிடுவீர்களா?" என்று கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.