காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: ம...
புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: "பவுன்சர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்தது ஏன்?" - கோ.சுகுமாறன்
நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 9-ம் தேதி ரெஸ்டோ பார் ஊழியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக செயற்பாட்டாளரும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளருமான கோ.சுகுமாரன், ``மிஷன் வீதியிலுள்ள ரெஸ்டோ பாரில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மோஷிக் சண்முகபிரியன் அங்கிருந்த பவுன்சர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

அவரது நண்பர் ஷாஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ரெஸ்டோ பார்களை கலால் துறையும், காவல்துறையும் கண்காணிக்காததாலும், விதிகளை மீறி விடிய விடிய நடத்த அனுமதித்ததாலும்தான் இந்தக் கொலை நடந்துள்ளது.
சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் நகரம் முழுவதும் ரெஸ்டோ பார்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 12 மணிக்கு மேல் செயல்பட்டதால் 11 ரெஸ்டோ பார்களின் உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கலால் துறை. இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 251 ரெஸ்டோ பார்கள் உள்ளன.
இதில் புதுச்சேரியில் 212, காரைக்காலில் 31, மாகேயில் 3, ஏனாமில் 5 ரெஸ்டோ பார்கள் உள்ளன. விதிகளை மீறி மக்கள் நெருக்கமாக வசிக்கக் கூடிய இடங்கள், பள்ளிகள், கோயில்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டும் உள்ளது. ரெஸ்டோ பார்களில் சட்டத்திற்குப் புறம்பாக பவுன்சர்கள் என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்ள கலால் துறை, காவல்துறை அனுமதித்தது ஏன்?
இதனால் ரெஸ்டோ பார்கள் கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. எனவே, புதுச்சேரி அரசு ரெஸ்டோ பார்கள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்றார்.