பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.
இதைக் கவனித்த பொதுமக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்திற்குத் தேடியபோது 19 இடங்களில் மனித உடல் உறுப்புகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. ஆனால் தலை மட்டும் கிடைக்கவில்லை.
கிடைத்த உறுப்புகளைக் கொண்டு கொலை செய்யப்பட்டது யார் என்று கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பெண் என்று தெரிய வந்தது. காலில் மெட்டி இருந்தது. அதனை வைத்து பெண் என்று தெரிய வந்தது. இதையடுத்து தும்குரு மாவட்டம் முழுக்க காணாமல் போனவர்கள் பட்டியலை போலீஸார் வாங்கி ஆய்வு செய்தனர். இதில் பெல்லாவி என்ற இடத்தைச் சேர்ந்த லட்சுமிதேவி (47) என்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது கணவர் பசவராஜ் புகார் கொடுத்திருந்தார்.
பசவராஜிடம் விசாரித்தபோது தனது மனைவி மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டுக் கடந்த 3ம் தேதி ஹனுமந்தபுராவில் இருந்து புறப்பட்டதாகவும், அதன் பிறகு வீடு வந்து சேரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கொரடகெரே என்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பசவராஜ் கொலை செய்யப்பட்டது தனது மனைவிதான் என்று அடையாளம் காட்டினார். இது திட்டமிட்டு நடந்த கொலை என்பதை போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி அசோக் கூறுகையில், ''கொலையில் துப்பு துலக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு படை ஹனுமந்தபுராவில் இருந்து எஸ்.யு.வி சொகுசு கார் ஒன்று புறப்பட்டுச் சென்றதைக் கண்டுபிடித்தனர். அந்த கார் கொரடகெரே நோக்கிச் சென்றது.
காரில் முன்பக்கமும், பின்பக்கமும் வேறு வேறு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த இரண்டு நம்பர் பிளேட்டும் போலியானது என்பதைக் கண்டுபிடித்தோம். அந்த காரில் வழக்கத்திற்கு மாறாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
அந்த காரின் உண்மையான நம்பர் பிளேட்டைக் கண்டுபிடித்ததில் அந்த கார் சதீஷ் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. விவசாயியான சதீஷ் ஏன் போலி நம்பர் பிளேட்டுடன் பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கார் ஓட்ட வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
லட்சுமி தேவி காணாமல் போன அன்று சதீஷ் போன் நம்பர் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது சதீஷ் தோட்டத்திற்கு எஸ்.யு.வி சொகுசு கார் வந்து சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்தனர். உடனே சதீஷைத் தொடர்பு கொண்டபோது அவர் வெளியூரிலிருந்தார்.
அவரையும் அவரது கூட்டாளி கிரணையும் அங்கே கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது தனக்கு இக்கொலையில் தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் விசாரணையில் எஸ்.யு.வி கார் ஆறு மாதத்திற்கு முன்பு சதீஷ் பெயரில் வாங்கப்பட்டு இருந்ததை மற்றொரு தனிப்படை கண்டுபிடித்தது.
அந்த காரை பல் டாக்டர் ராமச்சந்திரையா (47) சதீஷ் பெயரில் வாங்கி இருந்தார். ராமச்சந்திரையாதான் கொலை செய்யப்பட்ட லட்சுமி தேவியின் மகளையும் திருமணம் செய்திருந்தார். இதையடுத்து ராமச்சந்திரையாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு சதீஷ் முன்னிலையில் விசாரித்தபோது ராமசந்திரையா உண்மையை ஒப்புக்கொண்டார். லட்சுமி தேவி தனது மகள் வீட்டிலிருந்து கிளம்பியபோது அவரை ராமச்சந்திரையா தனது எஸ்.யு.வி காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த காரில் ஏற்கனவே சதீஷ் மற்றும் கிரண் இருந்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் லட்சுமிதேவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை அதே காரில் சதீஷ் தோட்டத்திற்குக் கொண்டு வந்து 19 துண்டுகளாக வெட்டி 19 இடங்களில் வீசியுள்ளனர். லட்சுமி தேவி அடிக்கடி மருத்துவர் ராமச்சந்திரையாவின் வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ளார். அதோடு ராமச்சந்திரையாவின் மனைவியை பாலியல் தொழிலில் தள்ளவும் லட்சுமிதேவி முயற்சி செய்துள்ளார்.
எனவேதான் இப்படியே இருந்தால் குடும்பத்தைச் சீரழித்துவிடுவார் என்று பயந்து லட்சுமிதேவியைக் கொலை செய்துவிட்டதாக ராமச்சந்திரையா தெரிவித்துள்ளார்'' என்றார். 6 மாதங்களாகத் திட்டம் தீட்டி இக்கொலையைச் செய்துள்ளார்.