China Robot Mall: வாலாட்டும் நாய் முதல் பரிமாறும் சர்வர் வரை; எல்லாம் ரோபோ மயம்!
பழனி: மகளுக்கு திருமணம் நடக்காததால் விரக்தி; மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை; என்ன நடந்தது?
பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் - விஜயா தம்பதி. கட்டித் தொழிலாளர்களான இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா, நல்லசாமிக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
தனலட்சுமி உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக திருமண வரன் கைகூடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பழனியப்பன் சில நாட்களாக மனமுடைந்து இருந்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 9-ந்தேதி விஜயா, மகன் நல்லசிவம் அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் சென்று விட்டதால் வீட்டில் பழனியப்பன், அவரது மகள் தனலட்சுமி மட்டும் இருந்தனர்.

இதனிடையே திருச்செந்தூருக்குச் சென்ற விஜயா, தனது கணவர் பழனியப்பன் செல்போனுக்கு நேற்று அழைத்துள்ளார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தயைடுத்து பழனியப்பன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆயக்குடி போலீஸுக்குத் தெரியப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தனலட்சுமி நெற்றியில் சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு மாலை போட்டு இறந்த நிலையிலும் அருகில் பழனியப்பன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். தனலட்சுமிக்கு அருகில் ஊதுபத்தி, சூடம் ஏற்றப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த போலீசாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடந்தது. அதில், தனலட்சுமி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதும், பழனியப்பன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, "தனலட்சுமிக்கு உடல் நலப் பாதிப்பு காரணமாக திருமணம் தடைப்பட்டு வந்ததால் சில நாட்களாகவே பழனியப்பன் மனமுடைந்து இருந்துள்ளார். மகள் கஷ்டப்படுவதைப் பார்த்து வேதனை அடைந்த அவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தவர் மனைவி, மகன் குடும்பத்தினரை கோவிலுக்கு அனுப்பி விட்டு வீட்டிலிருந்த தனலட்சுமியைக் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார்.
அவர் இறந்த பின்பு அவருக்குப் புதிய பட்டுச்சேலை போர்த்தி, பத்தி சூடம் பற்ற வைத்து நெற்றியில் சந்தனம், குங்குமம் திருநீறு பூசி இறுதிச்சடங்கு செய்தார். பின்பு மகளைக் கொலை செய்த அதே கயிற்றால் அங்குத் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.